இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!

விவசாயத்தின் அடிப்படை இடு பொருள் விதை. அது தரமானதாக இருந்தால் தான் நல்ல விளைச்சல் வரும். நல்ல முளைப்பு திறன் கொண்ட விதையானது நல்ல வீரியத்துடன் செயல்படும். வயலில் பயிர்கள் செழித்து வளரும். முளைப்பு திறன் குறைந்த விதைகளை பயன்படுத்தினால் மகசூல் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு அரசு இயற்கை முறை விவசாயத்தை முன்னெடுத்து அதை செயல்படுத்த விவசாயிகளை அறிவுறுத்துகிறது.

பாரம்பரிய விதைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்கி முளைக்காத மரபணு மாற்றப்பட்ட விதைகளை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பது விவசாய சங்கங்களின் வேண்டுகோளாகவும் உள்ளது. விவசாயிகள் தனியார் உர கடைகளை நம்பி ஒருபுறமும் அரசின் தோட்டக்கலை துறையையும் நம்பி உள்ளனர்.

முன்பு தாலுகா வாரியான விதைப்பண்ணைகள் இருந்த நிலையில் தற்போது அவற்றிற்கு மூடு விழா நடத்தப்பட்டு விட்டது. பெரும்பாலான விவசாயிகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப விளைச்சல் எடுத்தாலும், முன்பு போல் விதைப்பதற்கு விதையை எடுத்து வைக்க முடியாத நிலையில் உள்ளனர். காரணம் இயற்கை விவசாயத்தில் இருந்து மாறுபட்டு போனதால் எடுத்து வைத்த விதைகள் முளைக்கும் திறன் குறைவாக இருக்கும். காரணம் மரபணு மாற்றப்பட்ட விதைகள்.

அரசு மூலம் வேளாண் துறைகள் நெல், கம்பு, சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கு விதை பண்ணைகள் அமைத்து அவற்றை உருவாக்கியும், விவசாயிகளுக்கு தாய் விதைகளை வழங்கி அவர்களை கொண்டு விதைக்காக பயிர்களை உருவாக்கி அவற்றை வாங்கி விவசாயிகளுக்கு வழங்கியும், தோட்டக்கலை துறை மூலம் தனியார் நிறுவன விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு வழங்குகிறது.

இன்றைய சூழலில் இயற்கை முறை விவசாயம் செய்தால் குறுகிய காலத்தில் மகசூல் எடுக்க முடியாது என்பதும், தரமான விளைச்சல் இருந்தாலும், குறைவான அளவு பயிர்கள் கிடைப்பதாலும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஆளாகியுள்ள விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய தயங்குகின்றனர்.

அரசும் இயற்கை முறை விவசாயத்தை கடைக்கோடி விவசாயிகள் வரை கொண்டு செல்லாமல் இயற்கை முறை விவசாயம் தான் செய்ய வேண்டும் அதற்கான திட்டங்கள் மானியங்கள் ஆகியவற்றை போதுமான அளவில் வழங்காமல் கடமைக்கு ஊக்கப்படுத்துவதால் விவசாயிகள் மாற தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து ராம்பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக மரபணு மாற்றப்பட்ட விதைகளை வெளியேற்ற வேண்டும். அரசு விதை பண்ணைகளை உருவாக்கி விவசாயிகளுக்கு முளைக்கும் திறன் உள்ள விதைகளை பயிரிட முன்கூட்டியே வழிவகை செய்திட வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகளின் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இயற்கை விவசாயம் பெரிய அளவில் முன்னேறாமல் இருப்பதற்கு இந்த விதைகள் தான் காரணம். பல மருந்துகள் அடித்தால் தான் விதை பருவத்திற்கு வரும். விதையிலிருந்து விளைச்சல் வரைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்வதை தான் விதைகள் கேட்கின்றன. இவர்களிடத்தில் விவசாயிகளின் உழைப்பு நீர் ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் தோற்றுப் போகின்றன.

இனிவரும் காலங்களில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்து மாற்று ஏற்பாடாக விவசாயிகளே தன்னுடைய விளைச்சலில் இருந்து விதைகளை உருவாக்குகின்ற ஆராய்ச்சிகளை உருவாக்கி அதற்குரிய மானியங்களை வழங்க வேண்டும். இல்லையெனில் விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக மாறிவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்.

Advertisement