சென்னையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி

சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, சென்னையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது.


மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த இந்தப் பேரணியில், பா.ஜ., மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை; காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், தங்கள் குங்குமத்தை இழந்த நமது தேசத்தின் சகோதரிகளுக்கு நீதி கேட்கும் வகையிலும் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தது நமது மத்திய அரசு.


பயங்கரவாதிகளை மிக பத்திரமாக அடைகாத்து வந்த பாகிஸ்தானின் மீது நமது ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்களும், 11 ஏவுதளங்களும் திட்டமிட்டு துல்லியமாக அழிக்கப்பட்டன.


நமது இந்திய முப்படைகளின் இந்த மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ., சார்பாக மூவர்ணக்கொடி ஏந்திய யாத்திரை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் முதற்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற இந்த வெற்றிப் பேரணியில் பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நாமும் கலந்து கொண்டோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement