ஆசிய செஸ்: நிஹால் சரின் அபாரம்

அல் ஐன்: ஆசிய 'கான்டினென்டல்' செஸ் 7வது சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின் வெற்றி பெற்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் நடக்கிறது. இதன் 7வது சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின், உஸ்பெகிஸ்தானின் ரினாத் ஜுமாபயேவ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் அபிமன்யு சமீர் புரானிக், ஈரானின் சினா மோவாஹெட்டை தோற்கடித்தார்.


மற்றொரு போட்டியில் இந்தியாவின் இனியன் (கருப்பு), ரஷ்யாவின் லெவ் ஸ்வெரேவ் (வெள்ளை) மோதினர். இப்போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் முரளி கார்த்திகேயன் (வெள்ளை), ரஷ்யாவின் செர்ஜி லோபனோவ் (கருப்பு) மோதிய மற்றொரு போட்டி 29வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்ற இந்திய வீரர்களான பிரனேஷ், ஹர்ஷ்வர்தன், அஸ்வத், தங்களது போட்டியை 'டிரா' செய்தனர்.
ஏழு சுற்றின் முடிவில் ஈரானின் தனேஷ்வர், இந்தியாவின் அபிமன்யு சமீர் புரானிக் தலா 6.0 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.


பெண்கள் பிரிவில் இந்தியாவின் வந்திகா அகர்வால், ஸ்ரீஜா சேஷாத்ரி மோதிய போட்டி 'டிரா' ஆனது. மற்ற இந்திய வீராங்கனைகளான பத்மினி ராத், சவிதா ஸ்ரீ, ஸ்வாதி, தங்களது ஆட்டத்தை 'டிரா' செய்தனர். இந்தியாவின் நந்திதா தோல்வியடைந்தார்.

ஏழு சுற்றின் முடிவில் மங்கோலியாவின் பேட் எர்டீன் முன்குன்சுல், இந்தியாவின் ஸ்ரீஜா தலா 6.0 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

Advertisement