குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்

கூடலுார்: கூடலுார் அருகே பளியன்குடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரியை கலெக்டர் கண்டித்தார்.

பளியன்குடியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில், எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலையில் நடந்தது.

முகாமில் வனப்பகுதியை சார்ந்து வசித்து வரும் பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் வகையில் நடமாடும் ரேஷன் கடை துவக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மேஜை நாற்காலிகள் வழங்கப்பட்டது. வருவாய் துறை சார்பில் பழங்குடியின மக்கள் 44 பேர்களுக்கு ஜாதிச்சான்று வழங்கப்பட்டது.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மூன்று பேர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் உட்பட ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ.. மகாலட்சுமி, தனித்துணை கலெக்டர் சாந்தி, வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, சுகாதார அலுவலர் ஜவஹர்லால், தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, ஆர்.டி.ஓ., செய்யது முகமது உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement