மூன்று மாதத்தில் 2,200 பேருக்கு திருத்தணியில் வீட்டுமனை பட்டா

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், இந்திரா நகர், பெரியார்நகர், எம்.ஜி.ஆர்.நகர், அக்கைய்யநாயுடு சாலை, நேரு நகர் உள்ளிட்ட இடங்களில் பாறை, மலை, தோப்பு புறம்போக்கு, அனாதையினம் மற்றும் வண்டிப்பாதை ஆகிய நிலங்களில் 1,000க்கும் மேற்பட்டோர், 30 ஆண்டுகளுக்கு முன்பே வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பட்டா இல்லாததால், அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
திருத்தணி வருவாய் துறையினர், மேற்கண்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில், 2,200 பேர் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருவது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு, வருவாய் துறையினர் பரிந்துரை செய்தனர்.
கடந்த மாதம் பொன்னேரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், 20 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி துவக்கி வைத்தார். வருவாய் துறையினர் ஒவ்வொரு நகராக சென்று, வீடுகள் அளவீடு செய்து பட்டா வழங்கி வருகின்றனர்.
நேற்று இந்திரா நகர் பகுதியில், 38 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, தாசில்தார் மலர்விழி தலைமையில் நடந்தது. இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
பின், தாசில்தார் மலர்விழி கூறியதாவது:
திருத்தணி நகரத்தில், 120 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். மேலும், 580 பேரின் வீடுகள் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கும் கலெக்டர் உத்தரவு பெற்று பட்டா வழங்கப்படும். மூன்று மாதத்திற்குள், 2,200 பேருக்கும் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி 10 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
-
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களை நீக்கம் செய்ய அறிவுறுத்தல்
-
விஜய் கட்சியுடன் கூட்டணி: பன்னீர்செல்வம் அணி ஆலோசனை
-
ஆண்டிபட்டியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
-
பாதுகாப்பு இல்லாத சின்னமனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
-
க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் அரை குறையாக 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணி