விஜய் கட்சியுடன் கூட்டணி: பன்னீர்செல்வம் அணி ஆலோசனை

சென்னை : 'தனிக்கட்சி துவங்கி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியில் நீடிக்க முடியாத நிலைக்கு ஆளான பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
அவருடன், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ராஜ்யசபா எம்.பி., தர்மர் ஆகியோர் உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், அ.தி.மு.க., வேட்பாளரை விட அதிக ஓட்டுகள் பெற்று, இரண்டாவது இடம் பிடித்தார். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ., தலைமை பன்னீர்செல்வம், தினகரனின் அ.ம.மு.க., ஆகியவற்றை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது. அதற்கு பழனிசாமி ஒப்புக் கொள்ளாததால், பன்னீர்செல்வத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலர்களுடன், சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இன்றும் ஆலோசனை நடக்கவுள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ''நமக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் உள்ளது. பா.ஜ., தலைமை ஒருபோதும் கைவிடாது,'' என, ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், 'அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் நமக்கான இடத்தை இப்போதே உறுதிப்படுத்த வேண்டும். அது சாத்தியமாகாது என தெரிந்தால், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும். பின், விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, காலம் கடத்தாமல் கூட்டணி அமைக்க வேண்டும்.
'நம்மை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர்க்க தடையாக இருந்தால், பழனிசாமியை தோற்கடிக்க வியூகம் அமைக்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் இணைந்து போட்டியிட்ட நாம் குறிப்பிடத்தக்க ஓட்டுகளை வாங்கியதோடு, பல இடங்களில் அ.தி.மு.க., தோல்விக்கும் காரணமாக அமைந்திருக்கிறோம்.
அதே நிலையை உருவாக்குவதற்கான ஏற்பாட்டை பழனிசாமி மீண்டும் செய்தால், இம்முறையும் தோற்பது உறுதி' என கூறியுள்ளார்.
நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு வருகிறோம். இன்று கூட்டம் முடிந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோமா என்பதை பன்னீர்செல்வம் தெரிவிப்பார். தே.ஜ., கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது. இதைத் தவிர, வேறு எதையும் இப்போது என்னால் கூற முடியாது.
- வைத்திலிங்கம்
முன்னாள் அமைச்சர்




மேலும்
-
ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங்; ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பயணம்
-
ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிவு!
-
ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!
-
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு
-
கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!
-
மசோதா விவகாரத்தில் கெடு விதித்த உச்சநீதிமன்றம்; 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!