இரு குழந்தைகளை கொன்று தம்பதி துாக்கிட்டு தற்கொலை

திருச்சி:திருச்சியில், கடன் தொல்லையால் இரு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு, தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் அலெக்ஸ், 42. துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விக்டோரியா, 35. இவர் ரயில்வேயில் சிக்னல் பிரிவு உதவியாளராக பணியாற்றினார். தம்பதிக்கு ஆராதனா, 9, ஆலியா, 3, என இரு மகள்கள் இருந்தனர்.

நேற்று காலை இவர்களின் வீடு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அலெக்ஸ், விக்டோரியா துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.

குழந்தைகள் இருவரும், படுக்கை அறையில் விஷமருந்தி இறந்து கிடந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த பொன்மலை போலீசார் விசாரணை நடத்தியதில், கடன் பிரச்னையில் தம்பதி துாக்கிட்டு இறந்தது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

ஜவுளிக்கடை நடத்துவதற்கும், தன் சகோதரர் தொழில் துவங்கவும், இந்த தம்பதி கடன் வாங்கியுள்ளனர். விக்டோரியாவுக்கு ரயில்வே சம்பளம் வந்தும், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. ஜவுளிக்கடை வருமானமும் குறைந்ததால், நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, அவர்களும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு போலீசார்கூறினர்.

Advertisement