திருவையாறு கோவில் விழாவில் போலீஸ் தடியடி

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், சித்தரை சப்தஸ்தான திருவிழா, மே, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தான விழாவையொட்டி, ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும், 11ம் தேதி புறப்பட்டனர்.
பின், திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று, ஆறு ஊர் பல்லக்குகளும் காவிரி ஆற்றின் தில்லை ஸ்தானத்தில் சங்கமித்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, தில்லை ஸ்தானம் பல்லக்குடன், ஏழு ஊர் கண்ணாடி பல்லக்குகளும், திருவையாறு வீதிகளில் உலா வந்து, தேரடியில், சுவாமியை வரவேற்கும் கிருஷ்ணர் பொம்மையை பூவாக நினைத்து போடும் நிகழ்ச்சி நடந்தது.
இவ்விழாவில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிலர் மயக்கமடைந்தனர்.
அப்போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய போலீசார், பொதுமக்கள் மீது, தடியடியில் ஈடுபட்டதால், பொதுமக்கள், முதியோர் செய்வதறியாது தடுமாறி ஓடினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
திருவையாறு தேரடி மிகுந்த குறுகலான பகுதி. ஆண்டுதோறும் பொம்மை பூ போடும் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் என, போலீசாருக்கு நன்றாக தெரிந்தும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்படி இருக்க, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்களை மாட்டை அடிப்பது போல, அவர்கள் தடியடி நடத்தியது தவறான ஒன்று. கடந்தாண்டும் இதேபோல தடியடி நடந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு