கொலை செய்ய சதித்திட்டம் கடலுார் அருகே 8 பேர் கைது

கடலூர்: கடலுார் அருகே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அருகே ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்த சதாசிவம் கடந்த 2005ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ராமு உள்ளிட்ட 14 பேரில், ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேல்முறையீட்டில், ராமுவை தவிர மற்றவர்களை சென்னை ஐகோர்ட் விடுவித்தது. இந்நிலையில் இறந்துபோன சதாசிவம் மகன்கள் தொல்காப்பியன், ஈசன் ஆகிய இருவரும் தனது தந்தையை கொலை செய்தவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாக எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் கீழ்குமாரமங்கலத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.

அவர்கள், கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்த தொல்காப்பியன், 23, ஈசன்,19, சந்தானசாமி,25, தினேஷ்,22, திலீப்,26, புதுச்சேரி கூடப்பாக்கம் சுரேஷ்,20, விக்கிரவாண்டி நவீன்,20, புதுச்சேரி தொண்டமாநத்தம் ஆகாஷ்,21, என்பது தெரியவந்தது.

ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement