'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஊட்டி; ''ஆபரேஷன் சிந்துார்சிறப்பாக இருந்ததால், ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை, ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில், நீலகிரி தொகுதி எம்.பி.,யான ராஜாவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, கோடைக்கால விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட சிறுவர் - சிறுமியர், விளையாட்டு வீரர்களிடம் உரையாடி, 'குரூப் போட்டோ' எடுத்துக் கொண்டார்.
பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
இந்திய ராணுவம், பாக்., பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை மிகச் சிறப்பாக இருந்தது. அதனால், தேசப்பற்றோடு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மாபெரும் பேரணி நடத்தினோம். பேரணி மிகச் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செல்லுார் ராஜு, கருத்து சொல்கிறேன் பேர்வழி என தேவையற்ற கருத்துகளை பேசி உளறி இருக்கிறார். அரசியலில் அவர் ஒரு கோமாளி. கோமாளித்தனமாக எதையாவது பேசுவதை வாடிக்கையாக்கி உள்ளார்.
'பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்' என, ஆட்சிக்கு வருதற்கு முன் தெரிவித்தேன். தற்போது, 'எங்கள் நல்லாட்சிக்கு பொள்ளாச்சி சம்பவ தீர்ப்பு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆனால், பழனிசாமி, 'இந்த தீர்ப்புக்கு நாங்கள் தான் காரணம்' எனக்கூறி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். பிரச்னை நடந்தது அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில். அதில் நியாயம் கிடைக்க, நானும், தி.மு.க.,வும் எவ்வளவு போராட்டங்களை முன்னெடுத்தோம் என்பதெல்லாம் மக்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனாலும், பச்சையாக பொய் பேசுகிறார்.
அவர் சமீபத்தில் டில்லிக்கு சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பினார். ஆனால், அமித் ஷாவை அவர் எதற்காக பார்த்தார் என நாட்டுக்கே தெரியும்.
அப்போது அது குறித்து வாய் திறக்காத பழனிசாமி, இப்போது, '100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்; மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி பெறுவதற்காக சந்தித்தேன்' என சொல்கிறார்.
பொய் பேசுவது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. பொய் பித்தலாட்டம் செய்வது அவருக்கு கைவந்த கலை.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய தண்டனை பெற்று தரப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின், இத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், நோயாளிகளிடம் பேசினார். மருத்துவமனையில் உள்ள வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டு, டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரியிலும் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களை சந்தித்து பேசினார்.