இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை


இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்தியா - மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு ராணுவ கிழக்கு கமாண்ட் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ், அசாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.


அப்போது, இந்தியா- மியான்மர் எல்லையில் பகுதியில், மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தின் நியூ சம்டால் கிராமம் அருகே பயங்கரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.



இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேடுதல் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement