இன்று உதயமாகிறது பெருநகர பெங்களூரு ஆணையம்

பெங்களூரு: ஜி.பி.ஏ., - கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டி எனும் பெருநகர பெங்களூரு ஆணையம் இன்று உதயமாகிறது.

கடந்த மார்ச் 13ம் தேதி, கர்நாடக சட்டசபையில் 'பெருநகர பெங்களூரு நிர்வாக மசோதா - 2024' தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டது. இதை கவர்னரின் ஒப்புதலுக்காக, மாநில அரசு அனுப்பியது. இதில் சில விளக்கங்கள் கேட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மசோதவை திருப்பி அனுப்பியிருந்தார்.

அரசும் போதிய விளக்கம் அளித்ததால், ஏப்ரல் 24ம் தேதியன்று, மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அன்று மாலையே 'பெருநகர பெங்களூரு நிர்வாக சட்டம் - 2024' அரசிதழில் வெளியிடப்பட்டது.

புதிய சட்டத்தை மே 15ம் தேதி முதல் அமல்படுத்த, சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த சட்டம் இன்று அமலுக்கு வருகிறது.

பி.பி.எம்.பி., எனும் பிருஹத் பெங்களூரு மாநகராட்சி என்ற பெயர் மறைகிறது. இன்று ஜி.பி.ஏ., எனும் பெருநகர பெங்களூரு ஆணையம் உதயமாகிறது.

இந்த ஆணையத்தின் எல்லை விரிவுபடுத்தப்படும். தற்போது புறநகரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, அத்திப்பள்ளி, ஜிகனி தொழிற்பகுதிகள், பொம்மசந்திரா, சர்ஜாபுரா, பாகலுார், ராஜானுகுன்டே, ஹெசரகட்டா, தாசனபுரா, மாகளி, தாவரகெரே, கும்பலகோடு, கக்கலிபுரா, ஹாரோஹள்ளி உட்பட, பல பகுதிகள், ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் கொண்டு வரப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்பின், ஆணையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் பல்வேறு மாநகராட்சியாக பிரிக்கப்படும்.

பெங்களூரு மாநகராட்சி முன்னாள் ஆளுங்கட்சித் தலைவர் ரமேஷ் கூறியதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளாக, பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் தலைமையில் நிர்வாகம் செயல்படுகிறது. இதற்கிடையே அரசு, புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி மாநகராட்சி தேர்தலை, காங்கிரஸ் அரசு தள்ளிவைக்கும்.

பெருநகர பெங்களூரு ஆணைய சட்டம் கொண்டு வர, காரணம் உள்ளது. இப்போது தேர்தல் நடந்தால், காங்கிரஸ் 30 இடங்களிலும் வெற்றி பெறாது என்ற அறிக்கை, அரசுக்கு கிடைத்துள்ளது. எனவே தேர்தலை தள்ளிவைத்து, தோல்வியில் இருந்து தப்ப முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு கூறினார்.

Advertisement