பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'

கோவை: 'புதிதாக உருவாக்கியுள்ள துணை விதிகளின் அடிப்படையில், கோவை மாநகராட்சியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படும். அக்கட்டணம் செலுத்தாவிட்டால், அபராதம் விதிக்கப்படும். இனி, ஆண்டுதோறும், 3 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்' என, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சியில், 25 முதல், 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டு அமலில் இருக்கிறது; ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்தப்படும் என ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, கடந்தாண்டு அக்., மாதம் உயர்த்தப்பட்டது.
தவணை காலத்துக்குள் வரி செலுத்தாவிட்டால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை அரை சதவீதமாக குறைத்து, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது; இன்னும் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.
மக்களுக்கு சுமை
இச்சூழலில், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான விதிகளை, ஒழுங்குபடுத்துவதாக கூறி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரின் ஒப்புதலுடன், பல்வேறு துணை விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை, மக்களுக்கு பொருளாதார ரீதியாக சுமையை ஏற்படுத்துவதாக உள்ளன.
l கட்டடத்தின் பரப்புக்கு ஏற்ப, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டண விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. இப்பணிகள் மேற்கொள்ளவும், பராமரிப்பு செலவை ஈடுகட்டவும், வைப்புத் தொகை மற்றும் மாதாந்திர கட்டணம், ஆண்டுதோறும் மூன்று சதவீதம் அதிகரிக்கப்படும். ஏற்கனவே இணைப்பு பெற்றுள்ள, கட்டட உரிமையாளர்/ குடியிருப்புதாரர்கள், மீதமுள்ள வைப்புத் தொகையை, தற்போது நிர்ணயித்துள்ள வைப்புத் தொகை அளவுக்கு செலுத்த வேண்டும்.
l அடுக்குமாடி குடியிருப்புகள், தனி குடியிருப்பு வளாகங்கள் உள்ள குத்தகைதாரர்கள்/ வீடுகளுக்கு இணைப்பு வழங்க, வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணங்கள், அனைத்து குடியிருப்புதாரர்களிடமும் வசூலிக்கப்படும்.
l கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் போன்ற வழிபாட்டு தலங்களில், குடியிருப்பு முறையில் மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான, அருகில் அமைத்துள்ள கடைகள் மற்றும் பிற வணிக வளாகங்களுக்கு குடியிருப்பு அல்லாத முறை என கருதி, வைப்புத்தொகை மற்றும் அதற்குரிய அனைத்து தொகையும் செலுத்திய பிறகே இணைப்பு வழங்கப்படும்.
l புதிய துணை சட்டங்களின் கீழ், கட்டணங்கள் செலுத்தாவிட்டால், குடியிருப்பு உபயோகத்துக்கு ரூ.3,000, குடியிருப்பு அல்லாத இணைப்பு ரூ.6,000 என அபராதம் விதிக்கப்படும். இவ்விணைப்புகள் அபராதத்துடன் துண்டிக்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (1999ம் ஆண்டு சட்டம்) பிரிவு 199(2)ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் படி, துணை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் அபராதம் விதிக்கவும், கோவை மாநகராட்சி மாமன்றத்தில் உத்தரவிடலாம்.
இந்த துணை விதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஒப்புதலுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவால் பொதுவானதாக இயற்றப்பட்டவை என, தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
ஏதும் அறியாமல் நிறைவேற்றம்
இத்தீர்மானங்கள் பற்றி முழுமையாக அறியாமலும், படித்துக் கூட பார்க்காமலும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளான காங்., மா.கம்யூ., - இந்திய கம்யூ,, - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள், விவாதம் செய்யாமல், நேற்று நிறைவேற்றி விட்டனர்.
சொத்து வரி உயர்வால், ஏற்கனவே பொதுமக்கள் கஷ்டத்தில் இருக்கும் சூழலில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டணங்களை ஒரே நேரத்தில் உயர்த்தியிருப்பது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட தற்கு, ''சென்னையில் இருந்து வந்த அறிவுறுத்தல்படி, கடன் வாங்குவதற்காக, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும், இத் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பப்படுகின்றன. தமிழக அரசு முடிவெடுத்து, அரசாணை பிறப்பிக்கும். அரசிடம் இருந்து அறிவுறுத்தல் வந்த பிறகே, அமலுக்கு வர வாய்ப்பிருக்கிறது,'' என்றார்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங்; ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பயணம்
-
உ.பி யில் டபுள் டெக்கர் பஸ்சில் பற்றியது தீ; குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!
-
ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிவு!
-
ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!
-
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு
-
கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!