இந்திராவுடன் மோடியை ஒப்பிடுவதா? பா.ஜ., - எம்.பி., யதுவீர் கண்டனம்

மைசூரு: “அப்பாவிகளின் இறப்புக்கு, மத்திய அரசு நியாயம் கிடைக்க செய்துள்ளது. இந்திராவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல,” என பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவள் அளித்த பேட்டி:

அன்றைய காலத்துக்குத் தக்கபடி, அப்போதைய பிரதமர் இந்திரா பணியாற்றினார். இன்றைய காலத்துக்கு ஏற்றபடி, பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார். இந்த விஷயத்தில் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல.

பாகிஸ்தானுக்கு எதிரான போரின் வெற்றிக்கான பெருமை, கட்டாயம் இந்திய ராணுவத்தையே சாரும். போருக்கு திட்டம் வகுத்து கொடுத்த மத்திய அரசுக்கும், இதற்கான பெருமை சேர வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அரசியல் செய்யவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், அனைவரும் ஒற்றுமையாக கைகோர்த்து மத்திய அரசுடன் நிற்க வேண்டும்.

போர் நிறுத்தம் குறித்து, பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ஒன்பது பயங்கரவாதிகள் முகாம்களை கண்டுபிடித்து, தாக்குதல் நடத்தி பாடம் கற்பித்துள்ளோம்.

பாகிஸ்தான் என்ன சதி செய்தாலும், அதை இந்திய அரசு முறியடித்தே தீரும். பாக்., முயற்சிகள் தோற்றுள்ளன.

உலகம் முழுதும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். பாகிஸ்தானியர் தங்களின் செயல்களை நிறுத்தினால் மட்டுமே, உலகில் அமைதியை காண முடியும்.

இந்தியர்களை குறி வைத்து கொன்ற பயரங்கரவாதிகளுக்கு, நாம் சரியான பதிலடி கொடுத்தோம். நாம் பழிக்கு பழியாக போர் நடத்தவில்லை. பயங்கரவாதிகளை குறிவைத்து, தாக்குதல் நடத்தினோம். இந்திய கலாசாரத்து தக்கபடி பதில் அளித்தோம். அப்பாவிகளின் இறப்புக்கு, மத்திய அரசு நியாயம் கிடைக்க செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement