லஞ்சம் வாங்கிய 2 தாலுகா கருவூல அதிகாரிகள் சிக்கினர்

தட்சிண கன்னடா:ஓய்வு பெற்று உயிரிழந்த கணவரின் சலுகைகள் வழங்க பெண்ணிடம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட தாலுகா கருவூல ஊழியர்கள் இருவரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வாலின் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வந்தவர், 2023ல் ஓய்வு பெற்றார். உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

அவர் இறந்த பின், பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை கேட்டு இறந்தவரின் மனைவி, பன்ட்வால் தாலுகா கருவூலத்தின் முதன்மை கணக்காளர் பாஸ்கரை சந்தித்து இரண்டு மூன்று முறை முறையிட்டார்.

அதற்கு அதிகாரி, “பணம் இன்னும் வரவில்லை,” என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு, இறந்தவரின் கணக்கில் தொகை 'டிபாசிட்' ஆனது குறித்து அப்பெண்ணுக்கு பாஸ்கர் தகவல் அளித்தார்.

அலுவலகத்துக்கு வந்த பெண்ணிடம், தனக்கும், முதன்மை பிரிவு உதவியாளர் பசவே கவுடாவுக்கும் தலா 5,000 ரூபாய் கொடுக்கும்படி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக, மங்களூரு லோக் ஆயுக்தா போலீசில், அப்பெண் புகார் அளித்தார். அவர்களின் வழிகாட்டுதல்படி, நேற்று தாலுகா அலுவலகத்துக்கு சென்ற அப்பெண், பாஸ்கருக்கும், பசவே கவுடாவுக்கும் சேர்ந்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

இதை வாங்கியபோது, லோக் ஆயுக்தா போலீசார் பாஸ்கரையும், பசவே கவுடாவையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

Advertisement