போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற நபர் அதிரடியாக சுட்டுப்பிடித்தனர் போலீசார் கோவை அருகே பரபரப்பு சம்பவம்

அன்னுார்:கோவை அருகே தாக்க முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர், மதுரபுரியைச் சேர்ந்த சேகர் மகன் சக்திவேல், 25. இவர் வழியாம்பாளையத்தில் ஒரு கேன்டீனில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

சரவணம்பட்டியை அடுத்த காப்பி கடை, ரத்தினகிரி வீதியைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் ஹரிஸ்ரீ, 23. டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில் சக்திவேல் செல்லும்போது, ஹரிஸ்ரீ வாகனத்தை உரசும்படி சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு சக்திவேலின் இருப்பிடத்திற்குச் சென்ற ஹரிஸ்ரீ, துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு, சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரிஸ்ரீயை கைது செய்தனர்.

விசாரணையில், சூலூர் அருகே அரசூரில் துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் நேற்று அரசூர் சென்று துப்பாக்கியை மீட்க முயன்றனர். அப்போது திடீரென ஹரிஸ்ரீ, அந்தத் துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றார்.

உடனே இன்ஸ்பெக்டர் இளங்கோ சுட்டதில், ஹரிஸ்ரீ யின் இடது காலில் குண்டு பாய்ந்தது. ரத்த காயம் அடைந்த ஹரிஸ்ரீ கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் ஆகியோர் கோவில்பாளையத்தில் விசாரணை நடத்தினர்.

ஹரிஸ்ரீக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, யார் கொடுத்தார்கள் என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஹரிஸ்ரீ மீது ஏற்கனவே பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத தடைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

போலீசாரை அவர் துப்பாக்கியால் சுட முயன்றதும், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement