கைப்பற்றப்பட்ட காஷ்மீரை திரும்ப தரணும்

சென்னை:'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் வகையில், தமிழக பா.ஜ., தலைமையில், 'மூவர்ண கொடி பேரணி' சென்னையில் நடந்தது.
புதுப்பேட்டையில் உள்ள பழைய சித்ரா தியேட்டர் அருகில் நடந்த பேரணியில், கட்சிக் கொடிகளை தவிர்த்து, மூவர்ணக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி, பாரதமாதா வேடம் அணிந்த பெண் ஒருவரைத் தொடர்ந்து, ஒன்றரை கிலோ மீட்டர் துாரம், பேரணியாக நடந்து சென்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், 'பாகிஸ்தானை வீழ்த்துவோம்; பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்; ராணுவத்தின் வெற்றி இது; பிரதமர் மோடியின் வெற்றி இது; வெல்லுவோம் உலகத்தையே வெல்லுவோம்; தேசத்தை காப்போம்' என, கோஷங்கள் எழுப்பினர்.
பேரணி முடிவில் தலைவர்கள் பேசியதாவது:
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: நடந்து கொண்டிருப்பது காங்கிரஸ் ஆட்சி இல்லை. பிரதமர் மோடி ஆட்சி. இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால், இயற்கையாக உருவான தலைவர் நம்முடைய பிரதமர் மோடி. அவரிடம், யாரும் சில்மிஷம் செய்ய முடியாது. வால் ஆட்டினால் தப்பிக்க முடியாது. வால் ஒட்ட நறுக்கப்படுவதோடு, குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காது.
மொழியாலும், இனத்தாலும், தேசத்தை பிளவுபடுத்த நினைத்தால், அவர்களுக்கு போர் வாயிலாக, குண்டு மூலம் பதிலடி கிடைக்கும். அனைவரும் தேச உணர்வோடு செயல்பட வேண்டும். பாகிஸ்தானுடனான, சமீபத்திய போர் துவங்கி 15 நாட்களில், பா.ஜ.,வை ஆதரிப்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
தேச நலனுக்கான சிந்தனையோடு நடந்து கொள்வதை, உணர்வுள்ள இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர். அதனாலேயே, பா.ஜ.,வின் மவுசு உலக அளவில் கூடியுள்ளது.
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா செய்த தவறினால், பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் உள்ளது. அதுபோன்ற தவறு இனி ஒருக்காலும் நடக்காது என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கைப்பற்றப்பட்ட காஷ்மீரை, பாகிஸ்தான் மரியாதையாக திரும்ப கொடுக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
இந்தியாவுக்கு சிறந்த பிரதமராக மோடி கிடைத்துள்ளார். பாகிஸ்தானுடனான போரைக் காட்டி, எதிர்க்கட்சிகள் என்ன சதி செய்தாலும், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.
பாகிஸ்தான் மீது நாம் எடுத்திருக்கும் நடவடிக்கையானது, உலக அளவில் இந்தியா இப்படித்தான் என காட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தற்போதைய நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது.
முன்னாள் கவர்னர் தமிழிசை: நாம் சுதந்திரமாக தெருக்களில் நடமாடுவதற்கு காரணமான, பிரதமர் மோடிக்கு நன்றியும், துாங்கா இரவுகளை சந்தித்த ராணுவ வீரர்களுக்கு வணக்கத்தையும் கூற வேண்டும். இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் எதுவும் செய்து விட முடியாது; இந்தியாவில் தயாரித்தவைகள் பலன் தராது என கூறினர். அந்த நம்பிக்கையில் தான் பாகிஸ்தானும் இருந்தது. ஆனால், 'சிந்துார் ஆப்பரேஷனில்' இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களே பிரதானமாக பயன்படுத்தப்பட்டன. ரத்தத்தை சிந்திய ராணுவ வீரர்கள் அனைவரும், இந்தியாவில் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை, எதிர்கட்சித் தலைவரான ராகுல் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரணியில், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு