மதுபான கிடங்கில் தீ ரூ.10 கோடி 'சரக்கு' சேதம்

பத்தனம்திட்டா:கேரளாவின் திருவல்லாவில் உள்ள புலிகீழு என்ற இடத்தில், 'பெவ்கோ' என்றழைக்கப்படும், கேரள அரசுக்கு சொந்தமான மதுபான கிடங்கு உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கு மற்றும் அருகிலுள்ள அலுவலகத்திலும் தீ மளமளவென பரவியது. தகவல் கிடைத்த உடன் ஏழு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதற்குள் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. தீயில் மது மற்றும் சோடா நிரப்பப்பட்டிருந்த பாட்டில்களும் வெடித்துச் சிதறின. சுமார் 45,000 மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இதனால் அரசுக்கு, 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் வெல்டிங் பணிகள் நடந்து வந்ததாகவும், அதில் இருந்து வந்த தீப்பொறி தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குடியிருப்புவாசிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும், விரிவான விசாரணைக்குப் பின்னரே, தீ விபத்துக்கான காரணத்தை தீர்மானிக்க முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement