திருப்புத்துாரில் மே 18 க்குள் கொடிக்கம்பம் அகற்ற 'கெடு'

திருப்புத்துார்:திருப்புத்துார் தாலுகாவில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை மே 18 க்குள் அகற்றிக்கொள்ள வேண்டுமென வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.

திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் சர்வ கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில் தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமை வகித்து பேசுகையில், திருப்புத்துார் தாலுகாவில் பொது இடங்களில், முக்கிய ரோடுகளில் 147 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன.

இந்தக் கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி ஏற்கனவே கட்சி நிர்வாகிகளுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 80 கொடி கம்பங்களை நிர்வாகிகள் அகற்றி விட்டனர்.

அகற்றப்படாமல் 67 கொடிக்கம்பங்கள் திருப்புத்துார் அண்ணாத்துரை சிலை, காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் உள்ளன. மே 18 க்குள் இந்த கொடிக்கம்பங்களை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வருவாயத்துறையினரும்,போலீசாரும் இணைந்து அகற்றுவார்கள். ' என்றார்.

கூட்டத்தில் தாலுகா அளவிலான கட்சி நிர்வாகிகள், போலீசார்,பேரூராட்சி,நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement