இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு: டிரம்ப் எதிர்ப்பு

17

தோஹா: '' இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்பதால், அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைவதை பார்க்க விரும்பவில்லை,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவுகிறது. இதனால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக் கூறியிருந்தார்.


ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் 3 தொழிற்சாலைகள் உள்ளன. இரண்டு தொழிற்சாலைகள் தமிழகத்திலும், மற்றொன்று கர்நாடகாவிலும் உள்ளது. இதில் இரண்டு தொழிற்சாலைகளை பாக்ஸ்கானும், மற்றொரு தொழிற்சாலையை டாடா நிறுவனமும் நிர்வகித்து வருகின்றன. இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் வர உள்ளன.

Latest Tamil News

இந்நிலையில், அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசியதாவது: ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்னை உள்ளது. உங்களை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டு உள்ளேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை.


இந்தியாவின் நலன் குறித்து நீங்கள் எண்ணினால், அங்கு நீங்கள் தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினமாக உள்ளது.அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதாக இந்தியா கூறியது. வரி விகிதத்தை மாற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர்.


பல ஆண்டுகளாக உங்களை நன்றாக கவனித்துக் கொண்டோம். சீனாவில் நீங்கள் கட்டிய தொழிற்சாலைகளை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. தங்களின் நலனை இந்தியா காத்துக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement