மோதலை நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை: டிரம்ப் நிலையில் மாற்றம்

தோஹா: '' இந்தியா - பாக்., இடையிலான மோதலை நான் தான் நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை, '' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த 7 முதல் 10ம் தேதி வரை மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் வேண்டுகோளை தொடர்ந்து, போர் நிறுத்தம் உருவானது. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நபராக அறிவித்தார். இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படுவதை நிறுத்திவிட்டேன் என்றார். இதனை அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் டிரம்ப் பேசியதாவது:
நான் தான் போர் நிறுத்தம் செய்தேன் ஏன கூறவிரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த உதவி செய்தேன். இந்த பிரச்னை மேலும் மேலும் தீவிரமானது. பல்வேறு வகையான ஏவுகணைகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால், நாங்கள் தீர்வு கண்டோம். நான் இங்கும், அங்கும் செல்லவிரும்பவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, பிரச்னை தீரவில்லை என அறிந்தோம். ஆனாலும் அதனை தீர்த்து வைத்தோம். நாங்கள் வர்த்தகம் குறித்து பேசினோம். போருக்கு பதில் வர்த்தகம் செய்வோம் என்றேன். இதனால், பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் அந்த வழியில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
ஆயிரம் ஆண்டு பிரச்னைக்காக போரிடுகின்றனர். அந்த பிரச்னையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என நான் சொன்னேன். என்னால் சரிசெய்ய முடியும். நாம் அனைவரும் அமர்ந்து பேசுவோம். ஆயிரம் ஆண்டு பிரச்னைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிடுவீர்கள். நீண்ட காலமாக போர் நடக்கிறது. இது கடினமான ஒன்று. நீண்ட காலமாக போர் நடக்கிறது. அது உண்மையில் ஒரு நாள் கட்டுப்பாட்டை இழந்து செல்லப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.










