புரோ கபடி லீக்: வீரர்கள் ஏலம் எப்போது

புதுடில்லி: புரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வரும் மே 31ல் துவங்குகிறது.

கடந்த 2014ல் புரோ கபடி லீக் முதல் சீசன் நடந்தது. இதுவரை 11 சீசன் முடிந்துள்ளன. இதில் 8 அணிகள் கோப்பை வென்றுள்ளன. பாட்னா அணி அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த 11வது சீசனின் பைனலில் ஹரியானா அணி, பாட்னாவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றது.
நடப்பு ஆண்டில் புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம், மும்பையில் வரும் மே 31, ஜூன் 1ல் நடக்கவுள்ளன. கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக 8 வீரர்கள் தலா ரூ. ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்தமாகினர். தமிழ் தலைவாஸ் அணி, ரூ. 2.15 கோடிக்கு சச்சின் தன்வரை வாங்கியது. இதுபோல இம்முறை நிறைய வீரர்கள் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புரோ கபடி லீக் சேர்மன் அனுபம் கோஸ்வாமி கூறுகையில், ''புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மே 31ல் துவங்குகிறது. சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து, வலுவான அணியை தேர்வு செய்ய ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்,'' என்றார்.

Advertisement