'இங்க ஏன் வர்றீங்க... சென்னைக்கு போங்க' :கடன் கேட்டு செல்வோரை விரட்டியடிக்கும் தாட்கோ

1

சென்னை: மாவட்டங்களில் செயல்படும், 'தாட்கோ' அலுவலகங்களில் கடன் பெற, விண்ணப்பிக்கச் செல்வோரை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செல்லுமாறு, அதிகாரிகள் விரட்டி அடிப்பதாக புகார்எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

மாவட்டங்களில் செயல்படும், 'தாட்கோ' அலுவலகங்களில், எஸ்.சி., சமூகத்தினர் கடன் பெற விண்ணப்பித்தால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கநேரிடுகிறது.

குறிப்பாக, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் கடன் கேட்டு விண்ணப்பித்தால், உரிய முறையில் பதில் அளிக்காமல், 'சென்னைக்கு செல்லுங்கள்' என, அதிகாரிகள் விரட்டி அடிப்பதாக கூறப்படுகிறது.

உரிய ஆவணங்கள்



பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது:

கல்வி, வணிகக்கடன், சில்லரை விற்பனை கடன் என, பல்வேறு திட்டங்களை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதனால், தொழில்முனைவோர் மேம்பாட்டு கடன் பெற, தாட்கோ அலுவலகத்திற்கு கடந்த மாதம் சென்றோம்.

அங்கு உதவியாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, மாவட்ட மேலாளரை சந்திக்குமாறு கூறினார்.

மேலாளரிடம் தொழிலை மேம்படுத்த கடன் தேவைப்படுவதாக கூறியதோடு, உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம்.

அவர் முறையான பதில் அளிக்காமல், ஒரு வாரம் அழைக்கழித்தார். தொடர்ந்து சென்ற போது, அவர் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறினார்.

பொதுவாக, கடன் பெற விண்ணப்பித்தால், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஏதேனும் தவறுகள் இருந்தால் நிராகரிக்கப்படுவது வழக்கம்.

தொடர்கதை



ஆனால், விண்ணப்பிக்கும் முன்னரே சென்னைக்கு செல்லுங்கள் என, விரட்டி அடிப்பது ஏற்புடையதல்ல. அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான். சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் பிரமுகர்கள் சிபாரிசுடன் செல்வோருக்கு தான் கடன் கிடைக்கிறது.

எந்த பின்புலமும் இல்லாதவர்கள் விரட்டி அடிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement