சிந்து நதி நீர் விவகாரம்: மாறி மாறி விமர்சனம் செய்யும் உமர் அப்துல்லா - மெகபூபா முப்தி

ஸ்ரீநகர்: ஜீலம் நதியால் நிரம்பிய வுலர் ஏரியை புனரமைக்கும் துல்புல் திட்டம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பு ஏப்.,23ம் தேதி சிந்து நதி ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. ஆனால், எல்லை பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை முடிவில் மாற்றம் இல்லை என மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதனிடையே காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் வுலர் ஏரி உள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்திற்கு உட்பட்ட ஜீலம் நதியால் இந்த ஏரி நிரம்பியது. இந்த ஏரியை புனரமைக்கும் திட்டம் கடந்த 1987 ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், இது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதனால், 2007 ம் ஆண்டு இந்த திட்டப்பணி நிறுத்தப்பட்டது. தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இந்த திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் என முதல்வர் உமர் அப்துல்லா கூறி வருகிறார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடக்கு காஷ்மீரில் உள்ள உலர் ஏரியின் தடுப்பணையின் குடிமராமத்து பணி நடந்தது. 1980களில் துவங்கப்பட்ட இந்த திட்டம் பாகிஸ்தான் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால், துல்புல் திட்டத்தை மீண்டும் துவங்க முடியுமா என ஆர்வமாக இருக்கிறது. இதுஜீலம் நதியைக் கட்டுப்படுத்தும் நன்மையை நமக்கு அளிக்கும். அதேபோல், மின் உற்பத்தி திட்டங்களை குளிர்காலத்தில் மேம்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வர் மெக்பூபா முப்தி, '' இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு இடையில், உமர் அப்துல்லாவின் துல்புல் திட்டத்திற்கான அழைப்பு துரதிருஷ்டவசமானது. இரு நாடுகளும் ஒரு முழு போருக்கான விளிம்பு வரை சென்று பின்வாங்கி உள்ள நிலையில், காஷ்மீர் பல அப்பாவி உயிர்களை இழந்து துன்பத்தை சந்தித்து வருகிறது. இது போன்ற அறிக்கை பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான ஆத்திரமூட்டும் செயலாகும்.
நாட்டில் உள்ள பிற மக்களை போலவே காஷ்மீர் மக்களும் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர்கள். நீர் போன்ற அத்தியாவசியமான உயிர்காக்கும் ஒன்றை அரசியலாக்குவது மனித தன்மையற்ற செயல். அதேபோல், இரண்டு பேருக்கு இடையேயான பிரச்னையை சர்வதேச மயமாக்கும் ஆபத்தான செயல் என சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் அப்துல்லா வெளியிட்ட பதிவில், மலிவான விளம்பரத்துக்காகவும், எல்லை தாண்டி இருக்கும் யாரோ ஒருவரை திருப்திபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் குருட்டுத்தனமான செயல், காஷ்மீர் மக்களின் நலனுக்கு எதிரான வரலாற்று துரோகம். சிந்து நதிநீர் ஒப்பந்தம் இதனை ஏற்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன். இனிமேலும் எதிர்ப்பேன்.
அநீதியான ஒப்பந்தத்தை எதிர்ப்பது என்பது எந்தவகையிலும் வடிவத்திலும் போர் வெறியாகாது. இது காஷ்மீர் மக்களுக்கு நமது நீரை நமக்காக பயன்படுத்திக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்ட அநீதியை சரி செய்வது பற்றியது என விமர்சித்து இருந்தார்.
இதன் பிறகும் விடாத முப்தி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ' யார் யாரை திருப்திபடுத்த முயற்சி செய்கிறார்கள் என்பதை காலம் வெளிப்படுத்தும் என்றாலும், உங்களின் மதிப்பிற்குரிய தாத்தா அதிகாரத்தை இழந்த பிறகு, இரண்டு தசாப்தங்களாக பாகிஸ்தானுடன் இணைவது குறித்து பேசினார்.
ஆனால், மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்ததும், இந்தியாவுடன் நிற்பது என்று தனது நிலைப்பாட்டினை மாற்றினார் என்பதை நினைவுகூர்வது சரியாக இருக்கும். மக்கள் ஜனநாயக கட்சி உங்கள் கட்சியைப் போல் அரசியல் தேவைக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றியது இல்லை எனத் தெரிவித்து உள்ளார்.
இதற்கும் முப்திக்கு கண்டனம் தெரிவித்து உமர் அப்துல்லா கருத்து பதிவிட்டு உள்ளார்.




மேலும்
-
வருவாய் கோட்டத்தில் 20ல் ஜமாபந்தி துவக்கம் உள்வட்டம் வாரியாக தேதி அறிவிப்பு
-
கோவை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தேவை 'தீவிர சிகிச்சை!' ; பணிச்சுமையில் டாக்டர்கள் அல்லல்
-
கோடை உழவுக்கு 550 ஏக்கர் இலக்கு
-
நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் 'பாஸ்'
-
பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு
-
சூலுார் அரசு பெண்கள் பள்ளி 'சென்டம்'