வைஷாலி நான்காவது இடம்

கிராஸ்லோப்மிங்: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரில் இந்தியாவின் வைஷாலி, நான்காவது இடம் பிடித்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 'டாப்---2' இடம் பிடிப்பவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்கலாம். முதல் 5 கட்ட போட்டிகளின் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (308.34 புள்ளி), இந்தியாவின் ஹம்பி (279.17) முதலிரண்டு இடத்தில் இருந்தனர்.
இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்றார். 9வது, கடைசி சுற்றில் வைஷாலி, உக்ரைனின் அனா முசிசுக் மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி, 56வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
முடிவில் வைஷாலி, 5.0 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். உக்ரைனின் அனா முசிசுக் (6.0 புள்ளி), சீனாவின் ஜு ஜினெர் (6.0), டான் ஜோங்கி (5.5) முதல் மூன்று இடம் பெற்றனர்.
ஹம்பி ஏமாற்றம்
இதையடுத்து 6 கட்ட போட்டி முடிவில் ஜு ஜினெர், 352.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார். அலெக்சாண்ட்ரா (308.34) 2வது இடம் பிடிக்க, இருவரும், 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர். 2வது இடத்தில் இருந்த இந்தியாவின் ஹம்பி, 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அனா முசிசுக் (306.67) 3வது இடம் பெற்றார்.

Advertisement