துருக்கி நிறுவனத்துக்கு விமான நிலையங்களில் தடை: ஐகோர்ட்டில் 'ஸெலெபி' மனு

புதுடில்லி: இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, நம் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்.,குக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான ஆட்களை, மேற்கு ஆசிய நாடான துருக்கி வழங்கியது.
மேலும், பாக்., பிரதமரை 'சகோதரர்' எனவும் உண்மையான நட்புக்கு உதாரணம் எனவும் துருக்கி அதிபர் எர்டோகன், கூறினார். துருக்கியின் இதுபோன்ற பகிரங்க பாக்., ஆதரவு நிலைப்பாட்டால், அந்த நாட்டுடன் அனைத்து உறவுகளையும் நம் நாடு துண்டித்து வருகிறது.
அதன்படி, துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், நம் சிவில் விமான போக்குவரத்து துறையின், 'சிவில் விமான பாதுகாப்பு பணியகம்' அதிரடியாக ரத்து செய்தது.
இந்த நிறுவனம் வாயிலாக, டில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத், மும்பை உட்பட 9 முக்கிய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணி, பயணியர் சேவை, சரக்குகள் கையாளுதல் போன்ற பணிகளை, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, துருக்கியை சேர்ந்த 'ஸெலெபி ஏவியேஷன்' செய்தது. இவற்றில் 10,000க்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். இந்நிலையில், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்தது.
மேலும், இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு, பயணியர் சேவை, சரக்குகள் கையாளுதல், விமானங்களில் பயணியர் ஏறுவதற்கான பாலம் உள்ளிட்ட கருவிகள் வழங்குதல் போன்ற பணிகளுக்கான வெவ்வேறு விதமான ஒப்பந்த காலமானது, வருகிற 2036 வரை உள்ளதாகவும் 'ஸெலெபி ஏவியேஷன்' குறிப்பிட்டுள்ளது.
ஆனால், 'தேசத்தின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை முக்கியம் எனவும், இதில் பேச்சுக்கு இடமே இல்லை எனவும் நம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.







