ஆசிய போட்டியில் 4 பதக்கம் வென்று புதுச்சேரி மாணவி சாதனை 

புதுச்சேரி: ஆசிய அளவிலான வலுத்துாக்கும் போட்டியில் 4 வெண்கல பதக்கம் வென்று, புதுச்சேரி மாணவி மதுஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஆசிய அளவிலான வலுத்துாக்கும் போட்டிகள் கடந்த 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது.இப்போட்டியில், புதுச்சேரி ஒதியம்பட்டு, புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு மாணவியும், கோல்ட் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற வீராங்கனையான மதுஸ்ரீ, 47 கிலோ எடை பிரிவில் புதுச்சேரி சார்பில் பங்கேற்றார்.

இவர், ஸ்குவட், பென்ஸ் பிரஸ் மற்றும் டெட் லிப்ட் ஆகிய மூன்று பிரிவுகளில் வெண்கல பதக்கம், 230 கிலோ எடை பிரிவில் மற்றொரு வெண்கல பதக்கம் என,4 பதக்கங்களை வென்று சாதனை படைத்து, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.

ஆசிய போட்டியில் பதக்கம் வென்று புதுச்சேரி திரும்பிய மாணவி மதுஸ்ரீயை, புதுச்சேரி வலுதுாக்கும் சங்க சேர்மன் குணசேகரன், தலைவர் சந்திரபாபு, துணை தலைவர்கள் வேங்கை தாசன், மூர்த்தி, பொதுச்செயலாளர் பிரவீன் குமார், இணை செயலாளர்கள் ராஜகுரு, தண்டபாணி, பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் பாராட்டினர்.

இதில், நியூ ஸ்டார் ஜிம் பயிற்சியாளர் லிங்கேசன் வேலு, கோல்ட் உடற்பயிற்சி மையத்தின் பயிற்சியாளரும், மாணவியின் தந்தையுமான மகேந்திரன் உடனிருந்தனர்.

Advertisement