கேப்டன் பதவி யாருக்கு: ரவி சாஸ்திரி கணிப்பு

துபாய்: ''இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ரிஷாப் பன்ட் அல்லது சுப்மன் கில்லை நியமிக்கலாம்,'' என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் இருந்து இந்திய அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி ஓய்வு பெற்றனர். அடுத்து நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு (ஜூன் 20 - -ஆக.4), புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்படலாம்.

சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில், முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் இல்லாத நிலையில், கேப்டனாக செயல்பட்ட 'வேகப்புயல்' பும்ரா வெற்றி தேடித் தந்தார். இருப்பினும் இவர், அடிக்கடி காயத்தால் அவதிப்படுகிறார். இதனால், புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் துவக்க வீரர் சுப்மன் கில், துணை கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்படலாம்.
இதுகுறித்து முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

ஆஸ்திரேலிய தொடருக்கு பின், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக பும்ரா தான் சரியான தேர்வாக இருந்திருப்பார். ஆனால், தற்போது இவரை கேப்டனாக்க நான் விரும்பவில்லை. ஒருவேளை இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால், ஒரு பவுலரை இழக்க நேரிடும். ஏனெனில் காயத்தில் இருந்து மீண்டு வந்த இவர், உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.

பிரிமியர் போட்டியில் 4 ஓவர் மட்டும் வீசிய பும்ரா, டெஸ்டில் 10 முதல் 15 ஓவர் வரை வீச வேண்டியிருக்கும். இதனால் கேப்டன் பதவி கூடுதல் பணிச்சுமையாகிவிடும். என்னை பொருத்தவரை ரிஷாப் பன்ட் அல்லது சுப்மன் கில்லை கேப்டனாக அறிவிக்கலாம். இருவரும் பிரிமியர் தொடரில் கேப்டனாக செயல்படுகின்றனர்.

அன்னிய மண்ணில் சுப்மன் கில் சரியாக விளையாடவில்லை என்று கூறுகின்றனர். இளம் வீரரான இவர், விரைவில் மீண்டு ரன் மழை பொழிவார். தற்போது 25 வயதாகும் சுப்மன் கில்லுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தால், சிறந்த கேப்டனாக வலம் வருவார். அதற்கான தகுதி, திறமை அவரிடம் உள்ளது.
இவ்வாறு சாஸ்திரி கூறினார்.

Advertisement