ஆபரேஷன் சிந்தூர்: பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்தை, அமெரிக்காவின் 2011ம் ஆண்டு தாக்குதல் சம்பவத்துடன் ஒப்பிட்டு துணை ஜனாதிபதி ஜெக்தீப் தங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது. இதில், பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் சூறையாடப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் நழைந்து பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை கொன்றது. இந்த சம்பவத்துடன், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை ஒப்பிட்டு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தங்கர் பேசியுள்ளார்.


ஜெய்புரியா கல்வி நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பீகாரில் இருந்து பிரதமர் மோடி உலகிற்கே ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். அது வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை உலகம் இப்போது உணர்ந்துள்ளது. (பின்லேடனின் பெயரைக் குறிப்பிடாமல்) கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவில் செப்.,11 தாக்குதலை நடத்திய பயங்கரவாதி மீது அமெரிக்க படைகள் இதேபோன்று தான் தாக்குதல் நடத்தியது.


தற்போது, உலகிற்கே தெரியும் வகையில் அதனை இந்தியா செய்து முடித்துள்ளது. முதல்முறையாக சர்வதேச எல்லையை தாண்டிச் சென்று ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை அழித்து, அமைதியை நிலைநாட்டுவதற்கான, குறிப்பிடத்தக்க முயற்சியாக இது இருக்கும், எனக் கூறினார்.

Advertisement