கலைக்கும் கலைஞர்களுக்கும் ஜாதி, மதம் கிடையாது!: சொத்து என்பது சுமையாக இருக்கக்கூடாது!

பல ஆண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மற்றும் ஊர்க்காரர்களுக்கானதாக இருந்த அறுவடை ஒயிலாட்டத்தை, தமிழகம் முழுதும் மேடையேற்றி வரும், ஒயிலாட்டக் கலைஞரான ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த உமாராணி: என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துார். எங்களுடையது விவசாய குடும்பம். நாங்கள் மொத்தம் ஒன்பது பிள்ளைகள்; நான் எட்டாவது.

'பொட்டப்புள்ள வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; சிரித்து பேசக்கூடாது' என, அழுத்தம் கொடுக்கக்கூடிய ஆணாதிக்க மனப்பான்மையில் என் அண்ணன்களும் இருந்தனர். அடி வாங்கி தான் பிளஸ் 2 வரை படித்தேன்.

அந்த நேரத்தில் வளர்கல்வி இயக்ககத்தில், வீதி நாடகங்கள் வாயிலாக மக்களுக்கு பலவித விழிப்புணர்வு விஷயங்களை அரசு முன்னெடுத்தது. அதில் ஒரு கலைஞராக இணைந்து, வீதி நாடகமும், பறை இசையும் கற்றுக் கொண்டேன். மதுரையில் ஒரு வீதி நாடகம் நடத்தினோம்.

அது நாளிதழில் செய்தியாக வெளியாகி இருந்தது. 'எழவு வீட்டில் ஆடுகிற ஆட்டத்தை பொட்டப்புள்ள எதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்?' என்று கேட்டு, ரத்தம் வரும் அளவுக்கு வீட்டில் அடித்தனர்.

குடும்பத்தில் இருந்து என்னை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர். ஆனாலும், ஆணுக்கு சமமாக இல்லை; பெண்ணாக என் தகுதியை நானே உயர்த்திக் கொண்டேன். பேன்ட், சட்டைக்கு மாறினேன்; பைக், கார் ஓட்ட கற்றுக் கொண்டேன்.

சித்திரை மாதம் நடக்கும் மூன்றாவது போகத்தில், இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக ஒயில் ஆட்டம் ஆடுவர். அறுவடை ஒயிலை ராஜபாளையத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்க மட்டுமே ஆடும் வழக்கம் இருந்தது.

இதை, அந்த சமூக மக்கள் ஆரம்பத்தில் கற்றுக் கொடுக்க மறுத்தனர். அதன்பின், என்னிடம் கலைகள் கற்றுக்கொண்ட கலைஞர்கள் வாயிலாக புரிய வைத்து கற்றுக் கொண்டேன்.

எனக்கு இப்ப 40 வயசாகுது; திருமணம் செய்து கொள்ளவில்லை; கலைக்காகவே வாழ்ந்து வருகிறேன். 25 வகையான கலைகளை கற்றுக் கொண்டேன்.

கலை நிகழ்ச்சிகள் வாயிலாக வரும் வருமானத்தில் தான் வாழ்க்கை நகர்கிறது. இப்போது வரை 1,000க்கும் மேற்பட்டோருக்கு இக்கலையை சொல்லிக் கொடுத்துஉள்ளேன்.

கலையை கற்றுக்கொடுக்க காசு வாங்குவதில்லை. இந்த பெருவாழ்வு கலைக்கானது. கலைக்கூடத்துக்கு வரும்போது, காலணியை கழற்றுகிற மாதிரி, ஜாதி பெருமையை வெளியே விட்டுவிட்டு வரணும் என்பது மட்டுமே கட்டாயம்.


மனிதர்கள் தான் ஜாதி, மதம், ஆண் - பெண் பாகுபாடு பார்க்கின்றனர். கலைக்கும், கலைஞர்களுக்கும் அது கிடையவே கிடையாது.

சொத்து என்பது சுமையாக இருக்கக்கூடாது!



பிரபல எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் அரசியல்வாதியான தமிழருவி மணியன்:
சென்னை சூளையில் ஹிந்து ஒற்றுமை கழக மேல்நிலைப் பள்ளியில் வரலாறு, புவியியல் மற்றும் ஆங்கில ஆசிரியராக, 24 ஆண்டுகள் பணியாற்றினேன்.

அதன்பின் விருப்ப ஓய்வு கேட்டபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், 'இன்னும் ஒரு ஆண்டு இருந்தீர்கள் எனில், முழுமையான ஓய்வூதியம் கிடைக்கும். மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு வீட்டில்கூட இருங்க' என்றார். ஆனால், அது குறித்து கவலை கொள்ளாமல் உடனடியாக விருப்ப ஓய்வு பெற்றேன்.

அவர் கூறியது போல் செய்திருந்தால், இரண்டு மடங்கிற்கும் அதிகமாகவே ஓய்வூதியம் பெற்று இருக்கலாம். ஆனால், இன்றைக்கு என் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது; அது போதும் எனக்கு!

ஆசிரியராக இருந்த, 24 ஆண்டுகளிலும் தினமும் சைக்கிளில் தான் பயணம். பின், பஜாஜ் ஸ்கூட்டர் வாங்கினேன். 2017 வரை அந்த ஸ்கூட்டரில், சென்னையில் நான் பயணிக்காத சாலைகளே இல்லை. தற்போது, என் தேவைக்கு ஒரு 'மாருதி ஆல்டோ' இருக்கிறது. எப்போதும், 'செல்ப் டிரைவிங்' தான்.

என் மகன் மற்றும் மகள் திருமணங்களை மிக எளிமையாக நடத்தி முடித்தேன். இதை எல்லாம் என் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டது தான் பெரிய பிளஸ். குடும்பத்தை பொறுத்தவரை நான் சர்வாதிகாரி தான்; எதையும் கலந்து பேசி முடிவுஎடுக்க மாட்டேன்.

ஆனால், மனசாட்சிக்கு எதிராக நான் செயல்பட மாட்டேன் என்பது அவர்களுக்கு தெரியும். நான் ஒருபோதும் அறத்திற்கு புறம்பாக வாழ்ந்ததில்லை; எவரிடத்திலும், எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.

தற்போது, 77வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். அரசியல் கட்சிகளில் எத்தனையோ பதவிகளை வகித்துஇருந்தாலும், எனக்கென்று நான் எந்த சொத்தும் சேர்க்கவில்லை. வாடகை வீட்டில், என் மனைவியுடன் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சொத்து சுமையாக இருக்கக்கூடாது என்று, என் 20வது வயதிலேயே முடிவு செய்து விட்டேன். அதற்கு காரணம், நான் படித்த புத்தகங்களும், பழகிய தலைவர்களும் தான்.

எதிர்காலம் என்பது நம் கையில் இல்லை. இன்றைய பொழுதில் வாழுங்கள். நேற்றைய சுமைகளுடன், நாளைய சுமைகளையும் நினைத்து வாழாமல், இன்றைய வாழ்க்கையை வாழுங்கள். நாளைய பொழுது குறித்து யோசிக்கக் கூடாது. இன்றைய பொழுதே நிஜம்.

எனவே, நான் இன்றைய பொழுதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; நிறைவாக வாழ்கிறேன். இதுதான் நிஜம்!

Advertisement