தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்
திருப்பூர் : தமிழக சட்டசபை தேர்தலை திறம்பட நடத்துவதற்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. அந்த வகையில், 234 பி.எல்.ஓ., (பூத் நிலை அலுவலர்கள்) மேற்பார்வையாளர்களுக்கு, டில்லியில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல், வரும் 2026ல் நடைபெற உள்ளது. தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம், தேர்தல் கமிஷன், சட்டசபை தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளிலிருந்து, மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் தேர்தல் பணி கண்காணிப்பதற்காக, 10 ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம் பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்கள் உள்ளனர். முதல்கட்டமாக, சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம், பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்களுக்கு, தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
ஐ.ஐ.ஐ.டி.இ.எம்., எனப்படும்,ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச மையம் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 234 பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்களுக்கு டில்லியில் பயிற்சி அளிக்கப் பட்டுவருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வது, பல்வேறுவகையான படிவங்கள், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் நடைமுறைகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
டில்லியில் பயிற்சி பெற்று திரும்பும் பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்களை கொண்டு, தொகுதியில் உள்ள மற்ற மேற்பார்வையாளர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணியாற்ற உள்ள துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளுக்கு, அடுத்தடுத்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் செய்து, வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
தேர்தலுக்கானது என்பதால், எவ்வித விடுபடுதலுமின்றி பெயர் சேர்த்தல், நீக்கங்கள் மேற்கொண்டு, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என, அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பால் மூடி மறைத்த போலீஸ்
-
போதை டிரைவரிடம் பயணியர் தகராறு
-
லாரி மோதி 12 மாடுகள் சாவு 98 மாடுகள் தெறித்து ஓட்டம்
-
கொசுவலை முறைகேடு சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு
-
அகதிகள் முகாமில் குழந்தை நீரில் மூழ்கி பலி
-
வனத்துறை செக்போஸ்ட்டில் 'வசூல்': வனவர் சஸ்பெண்ட்