பா.ம.க., நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது; கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி

திண்டிவனம்: ''பா.ம.க., ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது. விரைவில் ராமதாஸ், அன்புமணி சந்தித்து பேசுவர். சுமூக முடிவு ஏற்படும்'' என கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., இளைஞரணி, மகளிரணி, மாணவரணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, மொத்தம் 21 நிர்வாகிகளுக்கு, நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதையேற்று, மாநில மகளிரணி மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் 19 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், பொதுச்செயலர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன், நேற்று முன்தினம் நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் அவர், ராமதாஸ் தோட்டத்தில் இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், கவுரவத்தலைவர் ஜி.கே. மணி அளித்த பேட்டி;
தமிழகத்தில் பா.ம.க., வன்னியர் சங்கம் வலிமையான அமைப்பு. பா.ம.க.,வில் உட்கட்சி பிரச்னையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது இயல்பான ஒன்றுதான்.
இதை பா.ம.க.,வுக்கான நெருக்கடியாகத்தான் பார்க்க வேண்டும். பா.ம.க., குடும்ப பாசத்தோடு இருக்கும் கட்சி. தற்போதைய நெருக்கடிக்கு சுமூக முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு கூட ராமதாசுடனும் அன்புமணியுடனும் பேசினேன். விரைவில் இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது.
மிக விரைவில், வலிமையான தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பா.ம.க., குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணி - ராமதாஸ் இடையே பிரச்னை ஏற்பட நீங்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறதே என, ஜி.கே. மணியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மணி, 'என்னைப் பற்றி யாரும் தவறாக பேசுவது என்பது, என்னை கத்தியால் குத்துவது போன்றது. 45 ஆண்டுகளாக இந்த கட்சியில் உள்ளேன். ஒரு உயிருக்குக்கூட தீங்கு நினைத்ததில்லை. பல கட்சிகளில் இருந்தும் எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டுத்தான், பா.ம.க.,வில் பயணிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு சுகமானது,'' என்றார்.
நேற்று முன்தினம் தைலாபுரத்தில் பா.ம.க., மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, அனைத்து நிர்வாகிகளையும் அழைத்திருந்தார் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ். ஆனால், 216 பேரில் 13 பேர் தவிர, மற்றவர்கள் யாரும் வரவில்லை. இதனால் கோபமான ராமதாஸ், கூட்டத்துக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டு, தன்னுடைய உதவியாளர் வாயிலாக மாவட்ட தலைவர்கள், செயலர்களிடம் பேசச் சொல்லி உள்ளார். அதைத் தொடர்ந்து உதவியாளர், அனைவரையும் தொடர்பு கொண்டபோது, பலர் போன் எடுக்கவில்லை. பலர் சுவிட்சுடு ஆப் செய்திருந்தனர். கூட்டம் நடந்த நாளுக்கு முதல் நாளே, பா.ம.க., தலைவர் அன்புமணி தரப்பில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்துக்கு போக வேண்டாம் என அன்புமணி சொல்லச் சொன்னதாக சொல்லி உள்ளனர். கூடவே, இது அன்புமணியிடமிருந்து வரும் உத்தரவு தான் என்பதை காட்டுவதற்காக, அன்புமணி செல்போனில் இருந்து மிஸ்டு கால் மட்டும் வரும் என்றும் சொல்லி உள்ளனர். அதேபோல, மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுக்கு அன்புமணி செல்போனில் இருந்து மிஸ்டு கால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்தே, ராமதாஸ் கூட்டிய கூட்டத்துக்கு பெரும்பாலான நிர்வாகிகள் செல்லாமல் புறக்கணித்து விட்டதாக, அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.