முதல் முறையாக லாபம் ஈட்டியதுகெம்பகவுடா விமான நிலையம்

முதல் முறையாக லாபம் ஈட்டியதுகெம்பகவுடா விமான நிலையம்
புதுடில்லி:கடந்த 2008ல் துவங்கப்பட்ட கர்நாடகாவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம், முதல் முறையாக, கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாக, அதன் இயக்குனர் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் தலைவர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், இது தெரிவிக்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் சிறந்து விளங்குவதற்காக, கெம்பகவுடா விமான நிலையத்துக்கு, சமீப காலமாக சர்வதேச அளவில் பல்வேறு அங்கீகாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், லாபம் ஈட்டியுள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது.
மின்சார பொருட்களின் தர கட்டுப்பாட்டுக்கு அவகாசம்
புதுடில்லி:மின்சார பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்ய, மத்திய அரசு சம்மதித்துள்ளது. மின்சார பொருட்கள் உற்பத்தியாளர் சங்கங்களின் கருத்துகளை கேட்டறிய, வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில், விதிமுறைகளை படிப்படியாக அமல்படுத்தவும், கடைப்பிடிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கவும் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து சான்று பெறுவதற்கு போதுமான அவகாசம் இல்லை என்றும்; பொருட்களை சோதனை செய்வதற்கு போதுமான சோதனை மையங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய வினியோக தொடர் சவால்களை உற்பத்தியாளர்கள் எடுத்துரைத்ததாகவும், இதனால் கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பரில், அனைத்து வகையான மின்சார பொருட்களுக்கும் ஒரே வகையான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.