ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் திருப்பூர் ஜவுளி துறை நம்பிக்கை 

திருப்பூர்:ஐரோப்பிய யூனியனுடன், டிச., மாதத்துக்குள் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற வாய்ப்புள்ளதாக, ஜவுளி தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கடந்த, எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சு சுமுகமாக முடிந்து, பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில், சாதகமான சூழல் நிலவுவதால், ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சை, மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த மாதம் ஐரோப்பா சென்று வந்துள்ளார். அந்நாட்டின் வர்த்தக சீரமைப்பு குழு விரைவில், இந்தியா வருகிறது.

இதுகுறித்து, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய வர்த்தக வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினர் ராஜா சண்முகம் கூறியதாவது:

பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தம் சுமுகமாக முடிந்துள்ளது. அமெரிக்காவுடனும் பேச்சு நடக்கிறது. வரும் டிச., மாதத்துக்குள், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுடனான வர்த்தகம் அபார வளர்ச்சி பெறும்.

குறிப்பாக, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், ஒரே ஆண்டில் 100 சதவீத வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. அதற்கான கட்டமைப்பு உருவாக்கத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement