பட்டா மாறுதலுக்கான கட்டணங்கள் விஷயத்தில் கவனம் தேவை!

வீடு, மனை போன்ற சொத்தக்களை வாங்கும் போது அதற்கான பத்திரப்பதிவு முறையாக முடிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கனும். நீங்கள் வாங்கும் சொத்துக்கு விற்பனையாளர் பெயரில் பட்டா உள்ளதா என்பதை முன்பணம் கொடுக்கும் முன்பே ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த பட்டாவில் உள்ள நில அளவும், பத்திரத்தில் உள்ள அளவுகளும் பொருந்திப் போகிறதா என்று பார்க்க வேண்டும். ஒரு சர்வே எண் அல்லது உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட சொத்து முழுமையாக கைமாறும் நிலையில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், புதிதாக உட்பிரிவு உருவாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா வழங்க சற்று தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், நீங்கள் சொத்து வாங்கியதற்கான பத்திரத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் விண்ணப்பம் தாக்கலாக வேண்டும் அதன் அடிப்படையில் நிலத்தை சர்வேயர் அளக்க வேண்டும்.

வீடு, மனை வாங்கும் போது அதற்கான பத்திரங்களை சரி பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும் பலரும், பட்டா விஷயத்தில் அலட்சியமாக உள்ளனர். நீங்கள் வாங்கும் சொத்துக்கான பத்திரப்பதிவுடன் அனைத்து பணிகளும் முடிந்ததாக நினைக்காதீர்கள்.

இதன்பின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, சொத்து வாங்குவோர் பட்டா மாறுதல் விஷயத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் என்ன, கட்டணங்கள் என்ன என்பதை தெளிவாக அறிய வேண்டும்.

இன்றைய சூழலில், சொத்து வாங்கிய மக்கள் தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டியதில்லை. தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால் போதும் என்றும் இதற்கு இ- சேவை மையத்துக்கு, 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையடுத்து, நிலத்தின் எல்லைகளை அளந்து கொடுக்க, உட்பிரிவு உருவாக்குவது போன்ற சேவைகளுக்கும் தலா, 60 ரூபாய் என கட்டணம் செலுத்த வேண்டும்.

இது மட்டுமல்லாது, உட்பிரிவு உருவாக்க, ஊரக பகுதியில், 400 ரூபாய், நகராட்சிகளில், 500 ரூபாய், மாநகராட்சிகளில், 600 ரூபாய் என கட்டணம் செலுத்த வேண்டும். நிலத்தின் எல்லையை அளக்கும் விஷயத்தில், ஒரு பக்கத்துக்கு, 200 ரூபாய் வீதம், நான்கு பக்கத்துக்கு, மொத்தம், 800 ரூபாய் செலுத்த வேண்டும். அரசாணை வாயிலாக வருவாய் துறை நிர்ணயித்த அடிப்படை கட்டணங்கள் இவை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Advertisement