அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!

3


திருவனந்தபுரம்: ''அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவுக்கு தனது பெயரை பரிந்துரை செய்யாமல், காங்கிரஸ் அவமானப்படுத்த முயற்சி செய்கிறதா என்ற கேள்வியை காங்கிரஸ் மேலிடத்திடம் தான் கேட்க வேண்டும், '' என அக்கட்சி மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த பட்டியலில் இல்லாத, மூத்த எம்.பி., சசி தரூரின் பெயரை மத்திய அரசு சேர்த்திருப்பது, காங்கிரசை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக சசிதரூர் கூறியதாவது: மத்திய அரசு அமைத்த குழுவில், நான் சேர்க்கப்பட்டதில் அரசியல் ஏதும் இல்லை. தேசம் பிரச்னையில் இருக்கும் போது, மத்திய அரசு குடிமக்களிடம் உதவி கேட்டால் என்ன செய்வீர்கள். நான் உடனடியாக இதற்கு ஒப்புக்கொள்வேன்.

பாகிஸ்தானுக்கு எதிராக பல மணி நேரம் போர் தொடர்ந்த நிலையில் நம்மைப் பற்றி சொல்வதற்கான குழுக்களில் நமக்கான பங்கு இருக்க வேண்டும். இதன் அடிப்படையில், மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளேன். என் மீது காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளதா என்பதற்கு கட்சி மேலிடத்திடம் தான் கேட்க வேண்டும்.

குழுவுக்கு தலைமை வகிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து விட்டேன். என்னை யாராலும் அவமானப்படுத்த முடியாது. எனது உயரம் எனக்கு தெரியும். நாட்டிற்காக எனது சேவையை கேட்கின்றனர். அதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தேசத்திற்கு பணியாற்றே வண்டியது குடிமக்கள் அனைவரின் கடமையாகும்.

நம் நாடு மீது தாக்குதல் நடத்தப்படும் போது, நாம் அனைவரும் ஒரே குரலில் பேசுவதுடன், நாட்டிற்காக ஒற்றுமையாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement