நெறிமுறைகளை நீதிபதிகள் மீறியிருந்தால்...: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு மஹாராஷ்டிராவில் நடந்த பாராட்டு விழாவில், தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பங்கேற்கவில்லை எனக்கூறிய பி.ஆர்.கவாய், '' நெறிமுறைகளை(Protocals) நீதிபதிகள் மீறியிருந்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் குறித்து விவாதம் எழுந்திருக்கும்'' எனக்கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு பிஆர் கவாய் முதல்முறையாக சொந்த மாநிலமான மஹாராஷ்டிரா வந்தார். மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் தலைமை நீதிபதி பேசியதாவது: ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை , சட்டம் இயற்றும் மன்றங்கள், நிர்வாகத்துறை ஆகியன சமம். ஒவ்வொரு அமைப்பும் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்று முதன்முறையாக மஹாராஷ்டிராவிற்கு வந்தால், மாநில தலைமைச் செயலர், டிஜிபி, அல்லது மும்பை போலீஸ் கமிஷனர் அங்கு இருப்பது பொருத்தமானது அல்ல என்று அவர்கள் நினைத்தால், அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.
நெறிமுறைகள் புதிய ஒன்றல்ல. ஒரு அரசியலமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றியது. ஒரு அரசியலமைப்பின் தலைவர் முதல்முறையாக மாநிலத்திற்கு வரும் போது, அவர்கள் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த நெறிமுறைகளை நீதிபதிகளில் ஒருவர் மீறியிருந்தால், அரசியல்சாசனப்பிரிவு 142 பற்றிய விவாதம் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாக தோன்றலாம். ஆனால், அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்றார். பாராட்டு விழாவில் அதிருப்தி தெரிவித்து பேசியது குறித்து அறிந்த உடன் தலைமைச் செயலர் சுஜாதா சவுனிக், டிஜிபி ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி ஆகியோர் இங்கு வந்து தலைமை நீதிபதியை சந்தித்தனர்.
142 வது சட்டப்பிரிவு
தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்துள்ளதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக கவர்னர் மற்றும் ஜனாதிபதியிடம் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்தனர்.. இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதால், நாடு முழுதும் அரசியல் அதிர்வை உண்டாக்கியது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு பதிலளிக்கும்படி கூறியுள்ளார்.













மேலும்
-
ரக்பி வீராங்கனைக்கு 'ரெட் கார்டு'
-
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே மற்றொரு சுற்று வர்த்தக பேச்சு நிறைவு
-
வங்கதேச அணி அசத்தல் வெற்றி: பர்வேஸ் சதம் விளாசல்
-
இரண்டாவது சுற்றில் மணிகா: உலக டேபிள் டென்னிசில்
-
பாக்.,கிற்கு கடன் வழங்கிய சர்வதேச நிதியம் புதிய நிபந்தனைகள்!: மின்சாரம், காஸ் விலை உயர வாய்ப்பு
-
ஆஸ்திரேலிய பட்டாணி இறக்குமதியை அனுமதிக்க வியாபாரிகள் வலியுறுத்தல்