நக்சல் பாதிப்பு பகுதியில் முதல் கால்நடை மருத்துவமனை: சத்தீஸ்கரில் திறப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதியில் முதல் கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது.

மஹாராஷ்டிரா எல்லையான மொஹ்லா-மன்பூர்-அம்பாகர் சௌகி மாவட்டத்தின் சீதாகான் கிராமம், சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சீதாகானைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் ஏராளமான கால்நடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் கால்நடைகளுக்கு ஒரு அடிப்படை மருத்துவமனையைத் திறக்கும் யோசனை ஐ.டி.பி.பி.,க்கு வந்தது.


மார்ச் 2026க்குள் நக்சல் வன்முறையை ஒழித்து, உள்ளூர் மக்களை பல்வேறு அரசு நலத்திட்டங்களில் ஈடுபடுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, இங்கு முதல் கால்நடை மருத்துவமனையை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை துவக்கி வைத்தது.
புதிதாக துவக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான முதல் கள மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி.பி.பி., அதிகாரி விவேக் குமார் பாண்டே கூறியதாவது:

புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த கால்நடை மருத்துவமனைக்கு, கோழிகள், பசுக்கள் மற்றும் நாய்கள் உட்பட தங்களுடைய கால்நடைகளுடன் வந்த பலர் இந்த இலவச சிகிச்சை வசதி பெற வந்திருந்தனர்.

சீதாகானைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 12,000 கால்நடைகள் பயன்பெறும் அளவில் இந்த கள மருத்துவமனை உதவும்.
இங்குள்ள கால்நடைகள் கிராமவாசிகளுக்கு வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை முறையாகவும் உள்ளன.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாவட்டத்தில் ஐ.டி.பி.பி., நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement