பீஹாரில் நிதீஷ்குமார் கிராமத்திற்கு செல்ல முயன்ற பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தம்

பாட்னா: பீஹாரில் பேரணியாக வந்த ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் நிதீஷ்குமாரின் சொந்த ஊரான நாலந்தா மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
மக்கள் மனம், வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டம் என்று வழக்கமாக உள்ள தேர்தல் பார்முலாவை அரசியல் களத்தில் மாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ரீதியான சில கூட்டணி பிளஸ் தேர்தல் ஓட்டு சதவீதக் கணக்குகள், அதற்கான அச்சார வேலைகள், பப்ளிசிட்டி இதுவே வெற்றிக்கு போதுமானது என்ற அஜெண்டாவை அரசியல் கட்சிகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.
அரசியல் கட்சிகளுக்கான பப்ளிசிட்டி என்ற ஒற்றை புள்ளியில் அவர் அறிமுகப்படுத்திய டிசைன், லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, மாநில அரசியலிலும் புதிய தடத்தை பதித்தது. சிறந்த அரசியல் வியூக அமைப்பாளர் என்ற முத்திரையையும் பெற்றுத் தர, அந்த கோதாவில் ஜன் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்து, பீகார் மாநில தேர்தலில் கால் வைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி மண்ணைக் கவ்வியது.
இருப்பினும், மனம் தளராத பிரசாந்த் கிஷோர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பல வியூகங்களை வகுத்து வருகிறார். மேலும், முதல்வர் நிதீஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற பிரசாந்த் கிஷோர், முதல்வர் நிதீஷ்குமாரின் சொந்த ஊரான நாலந்தா மாவட்டத்தில் உள்ள கல்யாண் பிக்கா என்ற ஊருக்கு வந்தார். ஆனால், ஊரின் எல்லையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, போலீஸ் உயரதிகாரிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரசாந்த் கிஷோர் கூறுகையில், கிராமத்திற்குள் நான் நுழைவதை தடுக்க முடியுமா? கிராமத்திற்கு வர உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா? மற்ற கிராமங்களுக்கு நான் செல்லும்போது அங்கு சட்டம் ஒழுங்கு இல்லையா? எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் இங்கிருந்து திரும்பிச் செல்வேன். என்னை மிரட்டுகிறீர்களா? நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளதால், நீங்கள் அனுமதி வாங்க வேண்டியது அவசியம். மக்கள் புகார் அளித்துள்ளனர். உங்களை தடுப்பது எனது நோக்கம் அல்ல என்றார். இதனால், அந்த பகுதியில் ப ரபரப்பு நிலவியது.



மேலும்
-
சட்டசபை தேர்தலில் இம்முறையும் தனித்துப்போட்டி: சீமான்
-
நெல்லையில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி தீக்கிரை; போலீஸ் விசாரணை
-
வங்கதேசத்திற்கு இனிமேல் கஷ்ட காலம்: சொல்கிறார் முன்னாள் தூதர்
-
வாடிகனில் கோலாகலம்: பதவி ஏற்றார் போப் 14ம் லியோ
-
இந்த மூன்று விஷயத்தை செய்தால் போர் நிறுத்தம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
-
பெண் போலீஸ் பலாத்காரம்: வழக்கை முடிக்க சப் இன்ஸ்பெக்டரிடம் ரூ.25 லட்சம் கேட்ட போலீசார் சஸ்பெண்ட்