இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் பலி

காசா: மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் காசாவின் தெற்கே உள்ள கான் யூனிஸ், வடக்கே உள்ள ஜபாலியா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் வான்வழித்தாக்குதலை நேற்று அரங்கேற்றினர்.

இந்த தாக்குதலில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களில் இருந்த ஏராளமானோர் இறந்தனர். பெரும்பாலான குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில், 103 பேர் உயிரிழந்தனர்.

இதில், பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி பயங்கரவாத படை இஸ்ரேலை குறிவைத்து நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது. எனினும், அவற்றை இடைமறித்து இஸ்ரேல் படையினர் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டரான முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement