வர்த்தகம் குறித்த புகாருக்கு விரைவில் பிரத்யேக தளம்

புதுடில்லி:வர்த்தக தீர்வுகளுக்கான விசாரணைக்கு தேவையான ஆவணங்களை, ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கும் வகையில், பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.

தாராளமயமாக்கல் கொள்கையால் உள்நாட்டு தொழில் துறையினருக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குநரகம், இறக்குமதிகளின் மீது விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழில் துறையினரிடம் இருந்து பெறும் புகார்களை கொண்டோ அல்லது தாமாக முன்வந்தோ விசாரணை மேற்கொள்ளும்.

பிற நாட்டு நிறுவனங்கள் பொருள் குவிப்பதை தவிர்க்கவும், சொந்த நாட்டு அரசிடம் இருந்து ஊக்கத்தொகை பெற்று, நம் நாட்டில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பதை தவிர்க்கவும், விசாரணைகள் நடந்து வருகின்றன. விசாரணை முடிந்ததும், வரி விதிப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும்.

Advertisement