பெண் போலீஸ் பலாத்காரம்: வழக்கை முடிக்க சப் இன்ஸ்பெக்டரிடம் ரூ.25 லட்சம் கேட்ட போலீசார் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில், பெண் போலீசை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டரிடம், வழக்கை முடிப்பதற்காக ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


கடந்த 2024 ம் ஆண்டு நவ.,16 ல் பெண் போலீஸ் ஒருவரை சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண், சைபர் நடவடிக்கைகளுக்கான பிரிவில் எழுத்தராக பணியாற்றிய அனு ஆண்டனியிடம் புகார் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளூர் பாதுகாவலராக பட்டாலியன் துணை கமாண்டன்ட் ஸ்டார்மோன்ஆர் பிள்ளை பணியாற்றினார். 3 நாட்களுக்கு பிறகு அவரிடமும் பலாத்கார சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.


ஆனால், இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியாமல், சட்ட ரீதியாக இல்லாமல் வழக்கை முடிக்க ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளனர். அனு ஆண்டனியும் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் நேரில் சந்தித்தும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வாங்கி உள்ளார். இதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சப் இன்ஸ்பெக்டரிடம் அந்த தகவல்களை பகிர்ந்து ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.


இது குறித்து தகவல் அறிந்த டிஜிபி விசாரணைக்கு உத்தரவிட்டார். அப்போது, இருவரும் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதனையடுத்து, டிஜிபி அறிக்கைப்படி அனு ஆண்டனி, ஸ்டார்மோன்ஆர் பிள்ளை ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


பலாத்கார சம்பவம் தொடர்பாக அறிந்தும் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்காமல், எந்த உதவியும் செய்யாமல் வழக்கை முடிக்க லஞ்சம் கேட்டு மிகப்பெரியதவறை செய்துள்ளனர். போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளனர் என சஸ்பெண்ட் உத்தரவில் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement