ஓடும் ரயிலில் யோகா: மும்பை மக்கள் ஆர்வம்

மும்பை: ஓடும் ரயிலில் உட்கார்ந்திருக்கும் போதும், யோகா செய்யும் பயிற்சியை மும்பையைச் சேர்ந்த ஒரு அமைப்பு அளித்து வருகிறது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் புறநகர் ரயில்கள் மிகவும் பிரபலம். அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசலால் ரயில்கள் திணறும். தொங்கியபடியே பயணம் செய்வது என்பது அங்கு சர்வ சாதாரணம்.

தன்னார்வ அழைப்பு

வேலைக்கு, படிப்பதற்கு என, சில மணி நேரம் கூட பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். தற்போது மும்பை புறநகர் ரயில்களில் பயணத்தின்போது உட்கார்ந்த நிலையிலேயே பயணியர் பலரும் யோகா செய்வதை பரவலாக பார்க்க முடிகிறது.

'ஹீல் ஸ்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ரயில் பயணத்தின்போது யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பயிற்சி அளிப்பதற்கு, 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர்.

''யோகா செய்வதற்காக யோகா மேட் தேவையில்லை. தீவிரமான பயிற்சிகளும் தேவை இல்லை. உட்கார்ந்திருக்கும் நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்துவது, மூச்சு பயற்சி போன்ற சுலபமான யோகா பயிற்சி செய்யலாம்,'' என, ஹீல் ஸ்டேஷன் அமைப்பின் நிறுவனர் ருசிதா ஷா கூறுகிறார்.

பெரும் வரவேற்பு

சர்வதேச யோகா தினம், ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறப்பு 100 நாள் பயண யோகா பயிற்சியை இந்த அமைப்பு, மார்ச் 13ல் துவக்கியது.

இதன்படி, யோகா பயிற்சியாளர்கள் அதிக கூட்டம் இல்லாத நேரங்களில் ரயில்களில் பயணம் செய்து சுலபமான யோகா பயிற்சிகளை அளிக்கின்றனர்.

இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்வத்துடன் பலரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement