ரக்பி வீராங்கனைக்கு 'ரெட் கார்டு'

சிட்னி: சிட்னியில் நடந்த பெண்களுக்கான சர்வதேச ரக்பி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27-19 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியின் 79வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜார்ஜி பிரீட்ரிக்ஸ், அமெரிக்க வீராங்கனை அலெவ் கெல்டரின் இடது காலை பிடித்து பந்தை கொண்டு செல்லவிடாமல் தடுத்தார். அப்போது கெல்டர், தனது வலது காலால், பிரீட்ரிக்சின் தலையில் தொடர்ச்சியாக மிதித்தார். உடனடியாக 'மேட்ச் ரெப்ரி' ஐமி பாரெட்-தெரான் தலையிட்டு கெல்டரை எச்சரித்தார். இதற்கு கெல்டர் மறுப்பு தெரிவிக்க, 'வீடியோ ரீவியூ' கோரினார் 'மேட்ச் ரெப்ரி'. இதில் கெல்டர், வேண்டுமென்றே தாக்கியது உறுதியானது. இதையடுத்து 'ரெட் கார்டு' காண்பித்து கெல்டர் வெளியேற்றப்பட்டார். ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமெரிக்க அணியில் இடம் பிடித்திருந்த கெல்டரிடம், இச்சம்பவம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கெல்டர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம்.
போட்டி முடிந்த பின் அமெரிக்க பயிற்சியாளர் சியோன் புகோபுகா, ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் மன்னிப்பு கேட்டார்.

Advertisement