ஆயிரம் சந்தேகங்கள்: சீட்டு கட்டும் நடைமுறையில் ஜி.எஸ்.டி., பிடிப்பார்களா?

ஒன்பதாவது படிக்கும் என் மகனின் மேற்படிப்புக்காக அஞ்சலக தொடர் வைப்பு திட்டத்தில், மாதம் 5,000 ரூபாயை, கடந்த ஆகஸ்டில் இருந்து சேமித்து வருகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிட்டுள்ளேன். இந்த முறையில் சேமிப்பது சரி வருமா; அல்லது, மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., முறையை தேர்ந்தெடுக்கலாமா? எஸ்.ஐ.பி., என்றால், எந்த வகையான வழி முறையை தேர்ந்தெடுப்பது?

சத்தியப்பிரியன்,

வத்தலக்குண்டு.


அஞ்சலக ஆர்.டி.யில் 6.70 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், தோராயமாக ஆண்டு ஒன்றுக்கு 12 முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சி கிடைக்கும்.

முடிந்தால் இன்னொரு 5,000த்தை கூடுதலாகச் சேமிக்க முடியுமா என்று பாருங்கள். முதல் 5,000த்தை அஞ்சலக ஆர்.டி.யிலும், இன்னொரு 5,000த்தை பங்குச் சந்தை சார்ந்த 'பிளெக்ஸிகேப்' மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும் எஸ்.ஐ.பி., முறையில் சேமித்து வாருங்கள்.

முன்னது ஐந்து ஆண்டுகள் முடிவில் 3.56 லட்சம் ரூபாயும், பின்னது, 12 சதவீத ரிட்டர்ன் தந்தாலே 4.05 லட்சம் ரூபாயும் கிடைக்கும். ஆனால், உங்கள் மகன் பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல் படிக்க விரும்பினார் என்றால், 'கேபிடேஷன் பீஸு'க்கு கூட இந்தத் தொகை போதாது.

அதன் பின் நான்கு ஆண்டுகளுக்கான கட்டணங்கள் வேறு உண்டு. இன்றைய காலகட்டத்தில் இளநிலை படிப்பு போதவே போதாது, முதுநிலை பட்டப் படிப்பும் அவசியம். அதனால், வயிற்றை கட்டி, வாயைக் கட்டி, இன்றைக்கே எவ்வளவு துாரம் சேமிக்க முடியும் என்று பாருங்கள். நாளைக்கு கொஞ்சம் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும்.

சீட்டு கட்டும் நடைமுறைக்கு ஜி.எஸ்.டி., பிடிப்பார்களா?

ஈ.தட்சிணாமூர்த்தி, சென்னை.

சீட்டில் விழும் பணத்துக்கு ஜி.எஸ்.டி., இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், 'போர்மென்' என்று அழைக்கப்படும் சீட்டு நடத்துபவர், அந்த சீட்டை நடத்துவதற்காக வசூலிக்கும் கமிஷன் மீது ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். முன்னர் 12 சதவீதமாக இருந்த கமிஷனுக்கான ஜி.எஸ்.டி., சமீபத்தில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. தொகையை ஏலச்சீட்டு நடத்துபவர் தான் அரசுக்குச் செலுத்தப் போகிறார் என்பதால், கூடுதல் ஜி.எஸ்.டி., தொகையை ஈடுகட்டுவதற்காக, முன்பு 5 சதவீதமாக இருந்த கமிஷன் தொகையை, அனுமதிக்கப்பட்ட வரம்பான 7 சதவீதம் வரை தற்போது உயர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், கூடுதல் கமிஷன் தொகை போக, வாடிக்கையாளர் கையில் கிடைக்கும் பணம் சற்று குறைவாகவே இருக்கும். பதிவுபெற்ற ஏலச்சீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. ஜி.எஸ்.டி., உயர்வு, மக்களை அந்தப் பக்கமே போகவிடாமல் செய்துவிடும்.

தபால் அலுவலக ஏ.டி.எம்., கார்டுகள் புதிதாகப் பெறுவதும், பழைய கார்டுகளைப் புதுப்பிப்பதும் நிறுத்தி விட்டதாக, தபால் அலுவலகத்தில் கூறுகின்றனர் என்ன காரணம் ?

அ.அருள், சிவகங்கை.

இப்போது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தச் செய்தி வெளியே தெரியவருகிறது. நிறுத்தப்பட்டது என்ற செய்தியை அஞ்சல் துறை தெரிவிக்கவில்லை. மாறாக, மத்திய அலுவலகத்தில் இருந்து புதிய அட்டைகள் தயாராகி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, அதனால் சற்றே சுணக்கம் என்று காரணம் சொல்லப்படுகிறது.

இதெல்லாம் ஏற்புடையதே அல்ல. பொதுத் துறை, தனியார் துறை வங்கிகளுக்குப் போய், கணக்கு துவங்கினாலேயே முதலில் ஏ.டி.எம்., / டெபிட் அட்டையைக் கையில் கொடுத்து அனுப்புகின்றனர். அஞ்சல் துறையும், அவர்களுக்கு இணையாக போட்டி போட வேண்டாமா?

மியூச்சுவல் பண்டு திட்டங்கள், எப்போதும், 12 சதவீத ரிட்டர்னை வழங்குகின்றனவா? பலரும் இந்த மதிப்பைச் சொல்லி வருகிறார்களே?

கே.சிவராமன், கொரட்டூர்.

இந்த 12 சதவீத ரிட்டர்ன் கருதுகோளுக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். உதாரணமாக, ஒவ்வொரு பண்டு பிரிவிலும் இருக்கும் பல்வேறு திட்டங்கள், கடந்த 10 ஆண்டு காலத்தில், தொடர்ச்சியாக எவ்வளவு வருவாய் ஈட்டியிருக்கின்றன என்று பார்க்கலாம். அதில், 12 சதவீதத்துக்கு மேல் வழங்கியவையே அதிகம்.

அதாவது, 24 லார்ஜ்கேப் பண்டு திட்டங்களில் 8, ஸ்மால் கேப் பண்டுகளில் 13க்கு 13, மிட்கேப் பண்டு திட்டங்களில் 20க்கு 20, ப்ளெக்ஸிகேப் பண்டுகளில், 18க்கு 12, இ.எல்.எஸ்.எஸ்., பண்டுகளில் 28க்கு 17 திட்டங்கள் 12 சதவீதத்துக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன.

இரண்டாவது, நம் நாட்டின் நாமினல் ஜி.டி.பி., 10.10 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படும்போது, திறமையாக நடத்தப்படும் பெருநிறுவனங்கள் 2, 3 சதவீதம் கூடுதலாக லாபம் ஈட்டும்.

இவை இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டே, மியூச்சுவல் பண்டுத் திட்டங்கள் 12 சதவீத ரிட்டனை வழங்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஒருவேளை பங்குச் சந்தை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் சரிவு அடையுமானால், இது பொருந்தாது.

எனக்கு வயது 41. எனக்கும் என் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் சேர்த்து 5 லட்சம் ரூபாய் கவரேஜ் உள்ள மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். அந்தப் பாலிசியில் 'ஆட்டோ ரெஸ்டோரேஷன்' உள்ளது என்று கூறுகின்றனர். அப்படி இருக்கையில், நான் கூடுதலாக டாப் அப் பாலிசி எடுக்க வேண்டுமா? அவ்வாறு எடுக்க வேண்டுமெனில், எவ்வளவு தொகைக்கு எடுப்பது அவசியமாக இருக்கும் என்பதையும்; அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றியும் விளக்கமாக கூறவும்?

எஸ்.ஜெயவேல், காஞ்சிபுரம்

மருத்துவ காப்பீடு என்பது நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்துள்ளீர்கள் என்பதில் இருந்து துவங்குகிறது. 'எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ ஒன்றும் நேராது' என்ற துணிச்சல் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் கவரேஜ் போதுமானது.

அப்படியே அந்தத் தொகை செலவு ஆனாலும், அதே அளவுக்குக் கூடுதல் தொகையைத் தருவதற்கான ஆட்டோ ரெஸ்டோரேஷன் வசதி வேறு இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.

பொதுவாக உடல்நலம் தொடர்பான 'ரிஸ்க்'கை வேறு விதமாக அணுகலாம். மருத்துவமனை, மருந்துகள், சிகிச்சைகளின் கட்டணங்கள் தொடர்ந்து உயர்கின்றன. நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றம் தொடர்பான நோய்களும் பெருகி வருகின்றன.

இவற்றினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு போக வேண்டிய சூழல் ஏற்படுமானால், அன்றைக்குக் கையில் போதுமான தொகை இருக்குமா என்பதைக் கணக்கிடுவது இன்னொரு முறை. இதில் எல்லோருக்கும் பொருத்தமான பதில் என்று ஏதுமில்லை. உங்கள் உடல்நலனுக்கு நீங்கள்தான் சிறந்த நீதிபதி.



வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.


ஆயிரம் சந்தேகங்கள்


தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.


ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh

ph: 98410 53881

Advertisement