கோப்பை வென்றது இளம் இந்தியா: தெற்காசிய கால்பந்தில் கலக்கல்

யுபியா: தெற்காசிய கால்பந்து (19 வயது) தொடரில் இளம் இந்திய அணி கோப்பை வென்றது. பைனலில் 4-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 'திரில்' வெற்றி பெற்றது. வங்கதேச அணி ஏமாற்றியது.

அருணாச்சல பிரதேசத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'ப்ரீகிக்' வாய்ப்பில் ஷமி சிங்கமாயும் ஒரு கோல் அடித்தார். இதற்கு வங்கதேச அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வங்கதேச அணிக்கு 61வது நிமிடத்தில் முகமது ஜாய் அகமது ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.


பின், 'பெனால்டி ஷூட்-அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் நான்கு வாய்ப்பில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்து 3-3 என சமநிலையில் இருந்தன. கடைசி வாய்ப்பில் வங்கதேச வீரர் அடித்த பந்தை இந்திய கோல்கீப்பர் சுராஜ் சிங் சாமர்த்தியமாக தடுத்தார். அடுத்த வாய்ப்பில் ஷமி கோல் அடிக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது.

முடிவில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று 4வது முறையாக (2019, 2022, 2023, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Advertisement