தாம்பரம் - சோமங்கலம் சாலையில் நெரிசல்

தாம்பரம்,:தாம்பரம் - சோமங்கலம் சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், இச்சாலை தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, சென்னை புறவழிச்சாலை மற்றும் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில் உள்ளது.

இதனால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சாலையோரம் பாப்பான் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு செல்கிறது.

அப்பகுதியில் மண் நெகிழ்வு தன்மையை இழந்ததால், சாலை உள்வாங்கி அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது.

இதை தடுக்க, தாம்பரம் அருகே கன்னடபாளையம் முதல் வரதராஜபுரம் வரை, சுமார் 2 கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தி, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

மேலும், பாப்பான் கால்வாயில் இருந்து, அடையாறு கால்வாயில் தண்ணீர் செல்லும் வகையில், சாலையோரம் புதிய கால்வாய் கட்டுமான பணிகள், ஒரு வருடமாக மந்தகதியில் நடந்து வருகின்றன.

இந்த பணிகளால், சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, புதிய சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement