அமைச்சர், எம்.எல்.ஏ.,வை உருவாக்கிய அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் பரிதாபம்

திருவொற்றியூர்:திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே செயல்படும், ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில், சில ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 5,000 மாணவர்கள் படித்த நிலையில், தற்போது 1,400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, தற்போதைய திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் உள்ளிட்டோர், இப்பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபமாக பள்ளியின் தேர்ச்சி விகிதம், கவலைக்குரிய வகையில் உள்ளது. இம்முறை பிளஸ் 2 தேர்வெழுதிய, 248 மாணவர்களில், 170 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இது, 68.50 சதவீதம்.

அதேபோல, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 138 மாணவர்களில் 96 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இது, 59 சதவீதம்.

பிளஸ் 1 தேர்வெழுதி, 231 மாணவர்களில், 113 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இது, 48.50 சதவீதம். கடந்த ஆண்டுகளாக தொடரும் தேர்ச்சி சதவீத வீழ்ச்சியால், பள்ளியின் வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை பாதித்துள்ளது.

எனவே, பள்ளிக்கல்வித் துறை தனி கவனம் செலுத்தி, மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சி விகிதம் உயரும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement