எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில கைப்பந்தில் 'சாம்பியன்'

சென்னை:நாகர்கோவிலில் இயங்கிவரும் ஐயா பவுண்டேஷன் சார்பில், நான்காவது மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், அங்குள்ள சாமித்தோப்பு மைதானத்தில் கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடந்தன.
இருபாலருக்குமான இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலை, வருமான வரித்துறை, சுங்க வரித்துறை, இந்தியன் வங்கி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
பெண்கள் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, தெற்கு ரயில்வே, டாக்டர் சிவந்தி கிளப், மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் ஆகிய அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' அடிப்படையில் நடந்தன. அதிக வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இதில், பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வீராங்கனையர், ஆரம்பம் முதலே ஒவ்வொரு 'லீக்' போட்டியிலும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற்றனர்.
தன் முதல் 'லீக்' போட்டியில், டாக்டர் சிவந்தி கிளப் அணியை 18 - 25, 25 - 17, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., அணி வீராங்கனையர், இரண்டாவது 'லீக்' போட்டியில், மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியை 25 - 16, 25 - 16 என, நேர் செட் கணக்கில் வென்றனர்.
இறுதி 'லீக்' போட்டியில், தெற்கு ரயில்வே அணியை 23 - 25, 25 - 21, 25 - 19 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய எஸ்.ஆர்.எம்., அணியினர், 'சாம்பியன்' பட்டத்தை வென்றனர். தெற்கு ரயில்வே, மினி ஸ்போர்ட்ஸ், டாக்டர் சிவந்தி கிளப் அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.