வேளாண் வளர்ச்சி 5.66 சதவீதம் தமிழக அரசு பெருமிதம்

சென்னை: 'தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, வேளாண் துறையில், ஆண்டுக்கு சராசரியாக 5.66 சதவீதம் வளர்ச்சி உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் வரலாற்றில், முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஐந்து வேளாண் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வழியே, 1 லட்சத்து 94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

முந்தைய, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், வேளாண் துறை வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக, 1.36 சதவீதமாக இருந்தது.

தி.மு.க., ஆட்சியில், 2021 முதல் 2024 வரை, ஆண்டுக்கு சராசரியாக, 5.66 சதவீத வளர்ச்சி உள்ளது.

தி.மு.க., அரசின் வேளாண் வளர்ச்சி திட்டங்களால், கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக்கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி திறனில், இரண்டாமிடமும், வேர்க்கடலை, தென்னை உற்பத்தி திறனில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. கடந்த, 2020 - 21ல், 89.09 லட்சம் ஏக்கராக இருந்த பாசன நிலப்பரப்பு, 2023 - 24ல், 94.68 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

பால்வளம்



கடந்த, 2018 - 19ல் 8,362 டன் பால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2023 - 24ல் பால் உற்பத்தி, 10,808 டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 2018 - 19ல், 1,884.22 கோடி முட்டை கள் உற்பத்தியான நிலையில், 2023 - 24ல், 2,233.25 கோடி முட்டைகள் உற்பத்தியாகி உள்ளன. மீனவர்களுக்காக 1,428 கோடி ரூபாய் மதிப்பில், 72 மீன் இறங்கு தளங்களும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement